ஆடிக்கிருத்திகை - திருத்தணியில் குவியும் பக்தர்கள்
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணியில் காவடியுடன் பக்தர்கள் குவிந்துள்ளனர். முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கி வருகிற 7ஆம் தேதி வரை நடக்கிறது.
இன்று ஆடி பரணியும், 5ஆம் தேதி ஆடி கிருத்திகை விழாவும் நடைபெறுகிறது. விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காவடி, அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
அதிகாலை 4 மணியளவில் மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடத்தப் பட்டது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வாணையுடன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவதற்கு சிறப்பு வசதிகளும், முருக பெருமானை தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு தரிசன வழிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.
Leave a Comment