திருப்பதி கும்பாபிஷேகத்தின்போது 1.9 லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம சாஸ்திர விதிமுறைகளின்படி நடத்தப்படும் அஷ்டபந்தன பாலாலய மகா சம்ப்ரோக்ஷ்ணம் எனப்படும் மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி, இம்மாதம் 12-ம் தேதி தொடங்கி, 16-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனையொட்டி, 11-ம் தேதி கோயிலில் அங்குரார்பணம் நடத்தப்படுகிறது. இதனால், பக்தர்களை சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பதின் மூலம், கோயில் மராமத்து பணிகளுக்கும், யாக பூஜைகளுக்கும் இடையூறு ஏற்படும் என தேவஸ்தானம் கருதியது. இதனால், வரும் 9-ம் தேதி வைகுண்ட க்யூவில் உள்ள பக்தர்களை மட்டும் தரிசனத்திற்கு அனுமதித்து, அதன் பின்னர், 11-ம் தேதியிலிருந்து, 17-ம் தேதி காலை 6 மணி வரை, பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதில்லை என முடிவு செய்தது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து, நேற்று திருமலையில் உள்ள அன்ன மய்யா பவனில் தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘மஹா சம்ப்ரோக்ஷணம் என்பது மிக முக்கியமான ஒரு நிகழ்ச்சி. ஆகம விதிகளின்படி நடத்தல் அவசியம். பக்தர்களை விட இது முக்கியமாகும். 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை குறைந்த பட்ச பக்தர்களை மட்டுமே அனுமதிக்க இயலும். அதாவது இந்த 6 நாட்களில் 1.2 முதல் 1.9 லட்சம் பக்தர்களுக்கு மட்டுமே சுவாமி தரிசனம் செய்விக்க இயலும். எனவே, பக்தர்கள் திருமலை பயணத்தை தள்ளி வைத்துக் கொள்வது நல்லது’’ என்றார்.
Leave a Comment