திருத்தணி கோவிலில்...ஆடிக்கிருத்திகை திருவிழா இன்று தொடக்கம்!
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை திருவிழா இன்று தொடங்கி வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது. அஸ்வினியுடன் இன்று ஆடிக்கிருத்திகை விழா தொடங்கியது. நாளை (4-ந்தேதி) ஆடி பரணியும், 5-ந்தேதி ஆடி கிருத்திகை விழாவும் நடைபெறுகிறது.தொடர்ந்து முக்கிய நிகழ்வான தெப்பத் திருவிழா 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் மாலையில் கோவிலுக்கு சொந்தமான சரவண பொய்கை திருக்குளத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
விழாவையொட்டி முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தி தங்ககவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.ஆடிக்கிருத்திகை விழாவை யொட்டி இன்று காலை முதலே திருத்தணி கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் காவடி, அலகு குத்தி வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதிகாலை 4 மணியள வில் மூலவர் முருகபெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடத்தப் பட்டது. பின்னர் முருகப்பெருமான், வள்ளி-தெய்வாணையுடன் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு முருகப்பெருமானின் அருளைப்பெறுவதற்கு எண்ணற்ற பக்தர்கள் திருத்தணிக்கு வந்த வண்ணமுள்ளனர்.
Leave a Comment