ஏரல் சேர்மன் கோயிலில்...ஆடி அமாவாசை திருவிழா தொடக்கம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான ஏரல் சேர்மன் அருணசாலசாமி கோவில் உள்ளது. இத்திருக்கோவிலில் வீற்றிருக்கும் ஏரல் சேர்மன் அருணாசல சுவாமிகள் தன்னை நாடி வரும் பக்தர்களின் குறைகளை தீர்த்து அருளாசி வழங்கி வருகிறார். குறிப்பாக மன நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து தங்கி குணமடைந்து செல்கிறார்கள் மேலும் இந்தக் கோயிலில் பிரசாதமாக கோயில் திருமண்ணும், தண்ணீரும் பக்தர்களுக்கு அளிக்கிறார்கள். அத்தகைய சிறப்புப் பெற்ற இத்திருக்கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலையில் பழைய காயலில் இருந்து சங்குமுக தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் சுவாமி கேடய சப்பரத்தில் அருணாசலசாமி திருக்கோலத்தில் எழுந்தருளி, கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9-ம் திருநாள் வரையிலும் தினமும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் பல்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். தொடர்ந்து 10-ம் திருநாளான வருகிற 11-ந் தேதி சனிக்கிழமையன்று ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சியாக நடக்கிறது.இத்திருவிழாவில் கலந்து கொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகின்றனர்.
Leave a Comment