அருணாசலேஸ்வரர் கோவிலில்...வரும் 4-ந்தேதி ஆடிப்பூரவிழா!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் விழா 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணி அளவில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். பின்னர் உண்ணாமலை அம்மன் கோவில் முன்பு உள்ள தங்க கொடி மரத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலையும், மாலையும் விநாயகர் உற்சவ ஊர்வலம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து விழா நாட்களில் காலையும், மாலையும் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் உற்சவ ஊர்வலம் நடைபெற உள்ளது.
இந்த விழாவானது கொடியேற்றத்தில் இருந்து தொடர்ந்து 10 நாட்கள் என 13-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 13-ந் தேதி காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும், மாலை வளைகாப்பு மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், வளைகாப்பு உற்சவமும், இரவு பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. ஆடிப்பூரத்தை முன்னிட்டு 13-ந் தேதி இரவு 12 மணிக்கு மேல் உண்ணாமலை அம்மன் சன்னதி முன்புறம் தீமிதி விழாவும், பராசக்தி அம்மன் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
Leave a Comment