திருவேற்காடு அம்மனுக்கு... இன்று 1008 சங்காபிஷேகம்!
கருணையே வடிவாய் காட்சித்தரும் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசித்தால் மலைபோல் வரும் துயர் யாவும் பனிபோல் விலகிவிடுவதாக இங்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர். மேலும் கருமாரித்தாயினை அவள் சந்நிதியில் சென்று தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் தரிசித்து வந்தால் வேண்டிய வரம் அனைத்தையும் விரும்பிய வண்ணமே பெறலாம் என்பது ஐதீகம். இத்தலத்து அன்னையை மணமாகாதவர்கள் வேண்டினால் அவர்கள் மனம் போலவே வாழ்க்கையும் அமையும்.
மலடி என தூற்றப்பெற்றவர்கள் கூட அன்னையின் பேரருளால் அழகும் அறிவும் கூடிய நன்மக்களைப் பெற்று வருகின்றனர். மேலும் தீர்த்திட இயலாத நோய்கள் கூட அன்னையின் அருட்கடாட்சத்தால் நீங்கப் பெறுகின்றன.
இத்தகைய சிறப்புடைய திருவேற்காடு கருமாரி அம்மன் ஆலயத்தில் ஆனி கடைசி ஞாயிறு முதல் 12 வாரங்கள் தொடர்ந்து அன்னை கருமாரிக்கு ஆடிப் பெருவிழா சீருடனும் சிறப்புடனும் நடைபெறும். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு தினங்களில் 1008 பால் அபிஷேகம், நவகலசம், சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, புற்றலங்காரம், 108 பால் குடம், படையல் போன்றவையும் தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று (31-07-2018) அம்மனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மன் அருளைப் பெறுவதற்கு திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து கொண்டிருக்கின்றார்கள்.
Leave a Comment