குமரி: பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற பகவதி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு ஆடி மாதங்களில் கொண்டாடப்படும் ஆடி களப பூஜை நேற்று தொடங்கியது. இந்த களப பூஜை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. முதல் நாளான நேற்று திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் வழங்கப்பட்ட தங்கக்குடத்தில் சந்தனம், களபம், பச்சை கற்பூரம், ஜவ்வாது, கோரோசனை, பன்னீர், அகில் போன்றவற்றை நிரப்பி கலச பிறையில் வைத்து பூஜை செய்யப்பட்டது.
அதன்பிறகு களபம் நிரப்பப்பட்ட அந்த தங்ககுடத்தை பஞ்சவாத்தியம், மேள, தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. களபாபிஷேகம் முடிந்த பிறகு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட களபம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு தங்க ஆபரணங்கள், வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாராதனையும், மதியம் அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் தீபாராதனையும், இரவு புஷ்பாபிஷேகமும் நடந்தது.
இந்த ஆடிகளப பூஜை வருகிற ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெறும். 11-ந் தேதி காலை 10 மணிக்கு கோவிலின் வெளிப்பிரகாரத்தின் தெற்கு பக்கம் உள்ள மண்டபத்தில் அதிவாச ஹோமம் என்ற பிரமாண்டயாகம் நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் பங்கு கொள்ள எண்ணற்ற பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமுள்ளனர்.
Leave a Comment