ஸ்வர்ண காமாட்சியாய்..எழுந்தருளிய தஞ்சை ஸ்ரீ பங்காரு காமாட்சி!
பங்காரு என்றால் பொன் எனப் பொருள்படும் அவள் தஞ்சையில் திரிபங்கி லலிதாகார மாகத் தரிசனம் தருகிறாள். அதனால் இத் தேவிக்கு சக்தி அதிகம் எனச் சொல்லப்படுகிறது. இவளால் பயன் அடைந்த பக்தர்கள், மன்னர்கள் ஏராளம் எனலாம்.காஞ்சியிலிருந்து தஞ்சைக்கு வந்து கொண்டிருந்த பங்காரு காமாட்சி செஞ்சியில் சந்தான மகராஜாவின் ஆதரவில் பதினைந்து ஆண்டுகளும் பிறகு, உடையார்பாளையம் ஜமீன்தார்களின் ஆதரவில் சுமார் அறுபது ஆண்டுகளும் தங்கி அருள்பாலித்தாள். அங்கு சேவை சாதித்த மண்டபம் இன்று ஸ்ரீ காமாட்சியம்மன் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.அங்கிருந்து நாகூர் வழியாக வரும்போது பகைவர்கள் கண்ணில் படாதவாறு அம்பாளை மறைத்து எழுந்தருளப் பண்ணி வந்தார்கள். இடையே பகைவர்களில் சிலர் தடுக்கவே அன்னை சிறு குழந்தையாகக் காட்சி தந்து, அனைவரையும் பிரமிக்கச் செய்தாள் என்பர்.
கடைசியில், திருவாரூரில் அம்பாள் அறுபது ஆண்டுகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். அப்போழுதுதான், இங்கு பிறந்து வளர்ந்த சங்கீத மும்மணிகளில் ஒருவரான ஸ்ரீ சியாமா சாஸ்திரிகள் இந்த அம்பாளிடம் ஈடுபாடு ஏற்பட்டு தஞ்சை வந்தார். கீர்த்தனைகளைப் பாடினார். அம்மனே அருள்கூர்ந்து அவர் பக்தியை மெச்சி, நேரிடையாகத் தரிசனம் கொடுத்தாளாம்.பின் தஞ்சை கொங்கணஸ்வரர் கோயிலிலும், ஸ்ரீ மூல ஹனுமார் கோயிலிலும் தங்கி, தஞ்சைத் தரணி மக்களுக்கு அருள்பாலித்து வருகையில், தஞ்சை அரசர் சத்திரபதி ஸ்ரீமன் துளஜா மகாரஜாவின் கனவில் தோன்றி, தன் திக்வி4யத்தை மன்னருக்கத் தெரிவித்து, கோயிலொன்று கட்டும்படி ஆணையிட்டாள் அருபோலவே மன்னனும் சாரதா நவராத்திரியின் பொழுது இன்று உள்ள கோயிலைக் கட்டி அதில் ஸ்ரீ பங்காரு அம்மனை பிரதிஷ்டை செய்து, மகாகும்பாபிஷேகம் செய்து வந்தார்.
இன்றும் இக்கோயில் தஞ்சை அரண்மணை தேவஸ்தானம் பொறுப்பில் இருந்து வருகிறது. இங்கு வருடந்தோறும் நவராத்திரி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் ஏராளமாக வந்து வழிபடுகிறார்கள். அன்று விசேஷமான அலங்காரங்களும், அர்ச்சனைகளும் அம்மனுக்கு நடைபெறுகின்றன.
Leave a Comment