சங்கரநாராயண சுவாமி கோவிலில் இன்று ஆடித்தவசு திருவிழா!
பிரசித்திப் பெற்ற சிவாலயங்களுள் ஒன்றான நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் இன்று ஆடித்தவசு திருவிழா நடைபெறுகிறது.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. 10-ம் திருநாளான நேற்று காலை கோமதி அம்பாள் முளைப்பாரி எடுத்தல் அலங்காரத்தில் வீதி உலாவும், இரவு 10 மணிக்கு கோமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவும் வருதல் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக ஆடித்தவசு காட்சி 11-ம் திருநாளான இன்று 27-07-18 நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு சுவாமி-அம்பாளுக்கு விளா பூஜையும், 8.30 மணிக்கு சுவாமி-அம்பாள் மற்றும் சந்திரமவுலீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடக்கிறது. மதியம் 12.05 மணிக்கு தெற்கு ரதவீதியில் உள்ள தவசு மண்டபத்துக்கு கோமதி அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 2.45 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தவசுகாட்சிக்கு புறப்பாடும் நடக்கிறது.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் சங்கரநாராயணராக தவசுக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் தவசுக்காட்சிக்கு புறப்பாடும், இரவு 9 மணிக்கு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு யானை வாகனத்தில் சங்கரலிங்க சுவாமியாக காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த கண் கொள்ளா காட்சியை காண ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
Leave a Comment