திருப்பதியில் தரிசிக்க வேண்டிய நாராயணகிரி பாதாலு!
திருப்பதி செல்லும் பக்தர்கள் ஏழுமலையானை மட்டும் தரிசித்து விட்டு திரும்பிவிடுவது வழக்கம். ஆனால் திருப்பதி மலையில் அவசியம் தரிசிக்க வேண்டிய வேறு சில இடங்களும் உண்டு.
முக்கு பாவி
திருமலைக்கு நடந்து செல்லும் வழியில் ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்மர் கோயிலுக்கு முன்பாக முக்கு பாவி என்கிற ஆழமான கிணறு ஒன்று உள்ளது. இந்தக் கிணற்றுக்குப் பக்கத்தில் கரையில் பக்த ஆஞ்சநேய ஸ்வாமி மண்டபம் உள்ளது. மஹந்து மடத்தைச் சேர்ந்த ஸாதுக்கள் பூஜை செய்கின்றனர். ‘முக்கு’ என்றால் கோலம் போடுதல் என்று பொருள். கோலம் போடும் கற்கள் அதிகமாக இங்கு தென்படுவதால் அந்தப் பெயர் ஏற்பட்டது. ஸ்வேத சக்ரவர்த்தி என்கிற அரசனின் குமாரர் ஸம்பு என்பவர் இங்கு தவமியற்றினாராம். ஸ்ரீ நிவாஸன் நேரில் தோன்றி அவரை அனுக்கிரஹித்தாராம்.
ஹைஜ ஸிலா தோரணம்
திருமலையில் பெருமாள் சந்நிதிக்கு வடக்கில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இது உள்ளது. இதற்கு முன்பு இந்த ஸிலா தோரணம் ஸ்படிக சிலையாக இருந்ததாம். கடல் பொங்கி அலைகளால் தள்ளப்பட்ட சிலைகள் எனக் கூறுகிறார்கள். உலகிலேயே அபூர்வமான ஸிலா தோரணம் இது.
நாராயணகிரி பாதாலு
பெருமாள் சந்நிதிக்குச் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் நாராயணகிரி சிகரத்தின் மேல் பெருமாள் பாதங்கள் உள்ள சிலை ப்ரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டத்திலிருந்து நேராக பூலோகத்தில் கீழே இறங்கிய பகவான் இங்கு பாதத்தை வைத்து இறங்கினாராம். வருடம்தோறும் ஆடி மாதம் சுக்ல துவாதசி அன்று இங்குள்ள மண்டபத்தில் உள்ள தூண்களுக்கு 2 குடைகளைக் கட்டிப் பெருமாள் பாதங்களுக்குப் பூஜை நடக்கிறது.
பாதாள மண்டபம்
இது மலை அடிவாரத்தில் உள்ளது.ஸ்ரீ நிவா ஸனின் விஸாலமான இரண்டு பாதங்கள் சிற்பத்துடன் பெரியதாகக் காணப்படுகின்றன. திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் இங்கு அர்ச்சனை ஆரத்தி செய்வதற்கு வசதியாக தேவஸ்தான அர்ச்சகர் கள் இருக்கிறார்கள். இந்த இடத்தை அலிபிரி என்று அடிபுளி என்றும் கூறுகிறார்கள். இங்குள்ள புளிய மரத்தின் கீழேதான், உடையவர் ராமானுஜருக்கு, திருமலை நம்பிகள் ஸ்ரீ மத் ராமாயண ரகசியங்களை உபதேசித்தார் என்றும், அப்போது அவர் ஸேவிக்க வசதியாக திருமலை ஸ்ரீ நிவாஸனின் பாதங்கள் தோன்றிய தாகவும் வேங்கடாசல இதிஹாஸ மாலா என்ற நூல் கூறுகிறது.
Leave a Comment