நாகதோஷம் நீக்கும் சூலக்கரை நாகம்மன்!


விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் உள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் வீற்றிருக்கிறாள் நாகம்மன். நாக தோஷம் நீக்கி பக்தர்களுக்கு நல்லாசித் தருகிறாள். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினரும் இவ்வூரில் வாழ்ந்து வந்தனர். அந்த குடும்பத்தை சேர்ந்த முனீஸ்வரன் ஆசாரி, உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். மாரியம்மா கர்ப்பமுற்றாள். ஏழுமாத கர்ப்பிணியாக மாரியம்மன் இருந்தபோது ஒருநாள் காலை வயல்வெளிக்குச் சென்ற முனீஸ்வரன் வரப்பு மேட்டில் நல்ல பாம்பை கண்டார். 

பின் அரிவாளை எடுத்து பாம்பின் நடு கண்டத்தில் வெட்டினார். வெட்டுப்பட்ட பாம்பு பாதி உடலோடு புதருக்குள் சென்று பதுங்கியது. துடித்த கண்டம் பகுதி சற்று நேரத்தில் உயிரற்றுப் போனது. மாரியம்மாள் குழந்தை பெற்றாள். அந்த குழந்தை பெண் தலையோடும் பாம்பு உடலோடும் இருந்தது. அப்போதுதான் முனீஸ்வரன் தான் செய்த தவறை மனைவியிடத்தில் கூறினார்.  குழந்தை பிறந்த நாற்பத்தியோராவது நாள் நாகம் தீண்டி முனீஸ்வரன் இறந்தார். பின் நாகத்தை பெற்றெடுத்ததால் அவளை நாகத்தின் அம்மா என்று அப்பகுதியினர் அழைத்தனர். அதுவே நாளடைவில் நாகம்மா என பெயர் வந்ததாக அவள் எங்கு சென்றாலும் நாகம் அவளின் பின்னால் வரும். ஒரு நாள் அந்த நாகத்தை அவள் உறவினர் கொன்றுவிட அதற்கு ஊர்மக்களிடம் நியாயம் கேட்டாள் நாகம்மா. அவர்கள் நியாயம் வழங்காததால் அந்த ஊர்மக்களுக்கு சாபம் தந்து அங்குள்ள வீரப்பெருமாள் கோயிலுக்குச் சென்று உயிரை மாய்த்துக்கொண்டாள். அதன்பின் அவ்வூரில் கடும் பஞ்சமும், நாக தீண்டி இறப்போர் விகிதமும் அதிகமானதால். ஊர் மக்கள் அனைவரும் நாகம்மாவிடம் மன்னிப்பு கேட்டு அவளுக்கு சிலையெழுப்பி வணங்கினர். அதன் பின் சாபம் விலகி அப்பகுதியில் வளம் பெருகியதாக தல புராணம் கூறுகின்றன.

இக்கோவிலில் நாகம்மாள் கையில் பாம்புக் குழந்தையை வைத்தபடி அமர்ந்த நிலையில் வீற்றிருக்கிறாள். இக்கோயிலில் சிவராத்திரி அன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. மேலும் நாகதோஷம் உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜித்தால் நாக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.



Leave a Comment