அருள் பொழியும்... ஆடிப்பூரவிழா!
அம்மனுக்கு உகந்த ஆடிமாத்தில் அம்மனை விதவிதமாக அலங்கரித்து கொண்டாடுவது வழக்கம். அதில் குறிப்பாக ஆடிப்பூரம் திருவிழா பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும்போது கொண்டாடப்படுகிறது. இந்த திருநாளில் தான் உமாதேவி தோன்றியதாகவும், உலக மக்களை காக்க சக்தியாக அம்மன் உருவெடுத்த்தாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நாளில் தான் சித்தர்களும், ரிஷிகளும் கடும் தவம் புரிந்து அம்மன் அருளைப் பெற்றுவந்தனர் எனவும் கூறப்படுகின்றன.
இந்த நாளில் அம்மனுக்கு வளையல் அணிவித்து செய்யப்படும் வழிபாடு மிகவும் சிறப்பானது. திருமணத் தோஷமுள்ள கன்னிப்பெண்களும், குழந்தைச் செல்வம் கேட்டு பிரார்த்திக்கும் பெண்களும் ஆடிப்பூரத் தினத்தன்று அம்மனுக்கு நடக்கும் வளையல் சாற்று வைபவத்தில் கலந்து கொண்டு அம்மனை வணங்கினால் பலன் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
மேலும் ஆடிப்பூர விழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ‘முளைக்கொட்டு விழா’ என்ற பெயரில் வெகுவிமர்சியாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆடிபூரம் விழா நடைபெறும் பிரகாரத்திற்கு ‘ஆடி வீதி’ என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் இதே நாளில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வளை காப்பு விழா பதினாறு கால் மண்டபத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.
இதே நாளில் திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்று பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடக்கும் என்பது நம்பிக்கை. இதே நாளில் திருக்கருகாவூர் அம்மனுக்கும் ருது சாந்தி விழா வைபவம் நடைபெறும். அப்போது பெண்கள் கண்ணாடி வளையல்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, அதனை அர்ச்சித்து பெற்றுக் கொள்வார்கள். மேலும் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் என்பதனால், ஆடிப்பூரவிழா வைணவத்திருத்தலங்களில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது.
Leave a Comment