அஷ்ட காளியரில்... எட்டாவது காளி!


திருநெல்வேலியிலிருந்து 38 கி.மீ. தொலைவிலுள்ள கல்லிடைக்குறிச்சியில், மணிமுத்தாறுசிங்கம்பட்டி சாலையில் அமைந்துள்ளது காந்தாரி அம்மன் கோயில். அஷ்ட காளியரில் எட்டாவதாக அவதரித்தவள் இத்திருத்தலத்து அம்மன் என்று பக்தர்களால் போற்றப்படுகிறாள்.

தல வரலாறு:

ஆதிவராக பெருமாள் கோயிலுக்கு தேரோட்ட திருவிழா நடத்த வேண்டும் என்று ஊர் மக்கள் முடிவு செய்து. அதற்கு கொடியேற்றம் நிகழ்ச்சி  நடத்தப்பட வேண்டும் என்பதற்காக பக்தர்கள் ஒன்றுகூடி பாண்டிய மன்னன் வம்சா வழியைச் சேர்ந்த ஜமீன்தாரிடம் முறையிட்டனர். உடனே அவர் இறைப்பணி செய்ய ஒப்புக்கொண்டு கொடி மரத்துக்கு தேவையான மரத்தை வெட்டி கோயிலுக்குக் கொண்டு சேர்த்துவிடுகிறேன் என்று உறுதி கூறினார். ஜமீன்தார் உத்தரவுக்கேட்ப மரம் வெட்டி வண்டியில் வைத்துக் கொண்டு வந்தார்கள். அப்போது கல்லிடைக்குறிச்சி ஊர் எல்லையில் தற்போது காந்தாரி அம்மன் கோயில் இருக்கும் பகுதிக்கு வந்தபோது, அச்சாணி முறிந்து வண்டி அவ்விடத்தில் நின்றது அதிகமான ஆட்கள் முயன்றும் வண்டி நகராததால், யானையை கொண்டு வந்து மரத்தை எடுத்துச் செல்ல முயன்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. பிறகு நம்பூதிரியை வரவழைத்து பிரசன்னம் பார்த்தனர். அப்போது கொடிமரத்துடன் அஷ்டகாளியரில் ஒருவரரான பெண் தெய்வம் ஒன்று வந்திருப்பதாகத் தெரியவரவே, உடனே, இவ்விடத்தில் சிலை  அமைத்து பூஜை செய்தனர். பின்னர் அச்சாணி பூட்டி வண்டியை நகர்த்த, வண்டியும் வெகு எளிதாக நகர்ந்து கொடிமரம் கோயிலுக்குக் கொண்டு செல்லப்பட்டது. பின்னர் எட்டாவது பூஜை நடத்தும்போது அருள்வந்து ஆடிய ஒருவர் தனது பெயர் காந்தாரி அம்மன் என்றும் தனக்கு கோயில் எழுப்ப வேண்டும் என்றும் கூற, அதன்படி காந்தாரி அம்மன் கோயில் எழுப்பப்பட்டதாக, இத்தலவரலாறு கூறுகிறது.

இக்கோவிலில் மூலவராக  காந்தாரி அம்மன் அமர்ந்த கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மேலும் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கொடைவிழாவும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவும் நடைபெறுகின்றன. மேலும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதணைகள் செய்யப்படுகின்றன. இத்திருத்தலத்திலுள்ள அம்மன் பக்தர்களின் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றி, அவர்களின் தீராத வியாதிகளைக் குணமாக்கி அமைதியும் சந்தோஷத்தையும் அளிப்பதால் எண்ணற்ற பக்தர்கள் நாள்தோறும் அம்மனை நாடி வருகின்றனர்.



Leave a Comment