மானாமதுரை வீரஅழகருக்கு...திருக்கல்யாண வைபோகம்!
மானாமதுரை வைகை ஆற்றின் கீழ்கரையில் அமைந்துள்ள சவுந்திரராஜ பெருமாள் எனும் வீர அழகர்கோயிலில் ஆடி மாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த 18ஆம் தேதி மாலை அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. மறுநாள் அதிகாலையில் சுவாமிக்கு சுப்ரபாதம், திருமஞ்சனம் நீராட்டுவிழா நடத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுந்தரபாண்டியன் குரட்டிற்கு வீர அழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். அதன்பின் கோயில் முன்புறமுள்ள கொடிமரத்திற்கு வேதமந்திரங்கள் முழங்க காலை 8.05 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சந்தனம், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் கோபிமாதவன் பட்டர் அபிஷேகங்கள் நடத்தினார்.
தொடர்ந்து பத்துநாட்கள் ஹனுமன், கருடன் உள்ளிட்ட வாகனங்களில் வீர அழகர் மண்டபங்களில் எழுந்தருள்கிறார். நாளை (24-07-2018) சுவாமிக்கு திருக்கல்யாணமும், நாளை மறுதினம் (25-07-2018) அன்று புஷ்பபல்லக்கு உற்சவமும், 27ம் தேதி தேர்த்தடம் பார்க்கும் நிகழ்ச்சியும், 28ம் தேதி தீர்த்தவாரி உற்சவமும், 29ம் தேதி சைத்தியோபசாரத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணன், கோயில் அர்ச்சகர் கோபிமாதவன், பாபுஜிசுந்தர் உள்ளிட்ட விழாக்கமிட்டியினர் செய்து வருகின்றனர். திருவிழாவில் பங்கேற்று அழகர் அருளைப் பெற திரளான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வந்த வண்ணமிருக்கிறார்கள்.
Leave a Comment