பூமிக்குள் இருந்து வெளிப்பட்ட வீரமாகாளி அம்மன்!


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டத்தில் அமைந்துள்ளது அறந்தாங்கி வீரமாகாளி அம்மன் திருக்கோயில் அறந்தாங்கியைச் சுற்றியுள்ள பதினாறு கிராமங்களின் காவல்தெய்வமாக இக்கோவிலில் வாழும் அம்மன் போற்றப்படுகிறாள். முப்பது நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும் கோவில் என்றும் இத்தலத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. இத்தல வரலாறானது சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு திருவுருவச் சிலை செய்யும் எண்ணம் கிராம மக்களுக்கு ஏற்பட்டது. அப்போது உருவான சிலையை நான்கு கரங்களுடன் செய்து முடித்தனர். ஆனால், அந்தச் சிலையின் வலது மேல் கரத்தில் ஒரு விரலில், பின்னம் ஏற்பட்டு விட்டது. இதனால் ஊர் மக்கள் மனவருத்தம் அடைந்தனர்.

அன்றைய தினம் கோவில் அர்ச்சகரின் கனவில் தோன்றிய அம்மன், தான் பூமியில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும். நான் வெளிப்படும் நேரம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தாள். மேலும் என் ஆலயத்தில் இருந்து ஒரு ஆட்டை நடக்க விட்டு. அது எங்கு சென்று அமர்ந்து கொள்கிறதோ அங்கே தோண்டினால் என் வடிவம் கிடைக்கும் என்று கூறினாள். பின்னர் அவ்வாறே அக்கிராம மக்கள் அதை செய்த போது அம்மனின் பிரம்மாண்ட கற்சிலை அந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்த பிரம்மாண்ட சிலையை கோவிலில் பிரதிஷ்டை செய்த மக்கள் அம்மனை காவல் தெய்வமாக வழிபட தொடங்கினர்.

இக்கோவிலில்  கருவறையின் உள்ளே அன்னை வீரமாகாளி எழிலான கோலத்தில், பிரம்மாண்ட வடிவில் கருணை வடிவாக அருள்பாலிக்கிறாள். வலதுபுறம், கருப்பசாமி மற்றும் விநாயகர் சிலை வடிவங்கள் அமைந்துள்ளன. வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில், சிரசில் மகுடம் தாங்கி, வலது காதில் ஆணுக்குரிய நாகாபரணமும், இடது காதில் பெண்ணுக்குரிய பாம்படம் எனும் காதணியும் அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை, எண்கரங்களோடு காட்சியளிக்கிறாள்.

திருமணத்தடை உள்ளவர்களும், அனைத்துவித திருமண தோஷம் உள்ளவர்களுக்கும், தோஷங்களை நீக்குபவளாக வீரமாகாளி திகழ்கிறாள். மேலும் நாகதோஷம் உள்ளவர்களுக்கும், புத்திரதோஷம் உள்ளவர்களுக்கும், அன்னை தோஷங்களை நீக்கி அருள்பாலிக்கிறாள். மேலும் அம்மன் ஆசியால் குழந்தைப் பெற்றவர்கள் நேர்த்திக் கடனாக அந்தக் குழந்தையை இக்கோவிலுக்குத் தத்துக் கொடுத்து, மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர். மேலும் அம்மன் அருளால் திருமணமானவர்கள் பொட்டு கட்டிய தங்கத்தாலியை அம்மனுக்குக் காணிக்கையாக செலுத்தி, தங்கள் நேர்த்திக் கடனை நிறைவு செய்கிறார்கள்.



Leave a Comment