கோவை வனபத்திரகாளியம்மன் கோவிலில் ஆடிக்குண்டம் திருவிழா...


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி தேவிகோட்டத்தில் அமைந்துள்ளது வனபத்ரகாளியம்மன் திருக்கோவில். இக்கோயிலில் ஆடிமாதங்களில் ஆடிகுண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

அதில் அம்மனுக்கு தினசரி சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், தீபாராதனை, லட்சார்ச்சனை, கிராமசாந்தி முனியப்பன் பகாசூரன் வழிபாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6-வது நாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு யாகசாலை அமைத்து பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை காலை 7 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் அம்மன் சன்னதியில் சிம்மவாகன கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் பகல் 12 மணிக்கு கொடிமரத்தில் சிம்ம வாகன கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பரசாக்தி தாயே என்று கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர். 

பின்னர் மாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார பூஜை, 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. அதை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணி 12 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து திருக்குண்டம் திறத்தல் நிகழ்ச்சியும், நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும், 6 மணிக்கு திருக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் பங்கேற்று அம்மன் அருளைப்பெறுவதற்கு, ஏராளமான பக்தர்கள் இத்திருக்கோயிலுக்கு வந்த வண்ணமுள்ளனர்.



Leave a Comment