வாகன யோகம் தரும் கோவை ஈச்சனாரி விநாயகர்!
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் 9 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஈச்சனாரி விநாயகர் கோவில். இக்கோவிலில் வீற்றிருக்கும் விநாயகர் குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றமும் நல்ல உத்தியோகமும் கிடைக்கப்பெற செய்து அருள்பாலிக்கிறார். இத்திருத்தல வரலாறானது மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும், 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து, தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டார், பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாமல் போய் விட்டது. காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டைசெய்யப்பட்டது. விநாயகர் எழுந்தருளியுள்ள இடமே ஈச்சனாரி விநாயகர் திருக்கோயிலாக புகழ் பெற்று விளங்குகிறது
மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரம், மாடங்கள் மற்றும் பெரிய மண்டபங்கள் இத்திருத்தலத்தில் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது. இந்த கோவிலில் 27 நட்சத் திரங்களுக்கும் மலர் அலங்காரங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் வெவ்வேறு விதமாக அலங்கரிக்கப்பட்டு, அஸ்வினி முதல் ரேவதி வரையிலும், 27 வித மலர் அலங்கார அழகு செய்யப்பட்டு பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானதாகும்.இந்த கோவிலுக்கு இது பிரசித்தமானதாகும்.
மேலும் வாகன பூஜைக்கு பெயர்பெற்ற தலமாக இக்கோவில் விளங்குகிறது. கோவை நகர மக்கள் புதிய வாகனம் வாங்கி இங்கு வழிபடுவது அன்றாட நிகழ்வாக நடந்துகொண்டிருக்கிறது. மேலும் வாகன யோகம் தரும் கடவுளாகவும் இக்கோவில் விநாயகர் போற்றப்படுகிறார். இத்திருத்தலத்தில் பக்தர்கள் நேர்த்தி கடனாக, பால் அபிஷேகம் செய்தல், பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் ஆகியவைகளால் நிறைவு செய்கின்றனர்.
Leave a Comment