வழக்குகளைத் தீர்த்து வைக்கும் தண்டுமாரியம்மன்!


கோயம்புத்தூர் கோட்டையிலே காவல் தெய்வமாக மக்களை காத்து நிற்கிறாள் கோவை தண்டுமாரியம்மன். கோவை மாநகர் அவிநாசி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் கோயம்புத்தூர் கோட்டையிலே வேப்ப மரம், தொரட்டி மரத்தின் நிழலிலே வடக்கு நோக்கி தண்டு மாரியம்மன் அருள்பாலிக்கிறார்.

இத்தலவரலாறானது கொங்கு நாட்டு கோட்டைகளில் முக்கியமானதாக விளங்கிய கோயம்புத்தூர் கோட்டை 1768 லிருந்து 1791 ஆம் ஆண்டு வரை மூன்று தடவை முற்றுகையிடப்பட்டது. ஆங்கிலேயரை எதிர்க்க மைசூரில் இருந்து வந்த திப்பு சுல்தான் படைகள் கோட்டையில் முகாமிட்டிருந்தன. அப்போது அப்படையில் அம்மனின் தீவிர பக்தரான ஒருவர் கனிவில் வந்த அம்மன், வேப்பமரங்களுக்கும் காட்டுக்கொடிகளுக்கும் இடையே இருக்கும் நீர்ச்சுனைக்கு அருகில் தான் இருப்பதாக கூறி, தன்னை அங்கேயே வழிபடும்படி அம்மன் கட்டளையிட்டாள். அக்கட்டளையையேற்ற வீரர் தன்னுடன் மற்ற படை வீரர்களை சேர்த்து ஒரு சிறிய மேடை போல அமைத்து அம்மனை வழிபட்டதாக இக்கோயில் வரலாறு கூறுகிறது. தண்டு" என்றால் "படை வீரர்கள் தங்கும் கூடாரம்" என்பது பொருள். அங்கு கிடைத்த அம்மன் என்பதால் இந்த அம்மன் "தண்டுமாரியம்மன்" என்று அழைக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும் இத்திருக்கோயிலில் மூலவராக அம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோவில் சன்னதிக்கு மேல்புறமிருக்கும் அரசமரத்தின் கீழ் கற்பக விநாயகர் வீற்றிருக்கிறார். மேலும் முன் மண்டபத்தில் அஷ்ட லட்சுமியின் திருஉருவங்கள் உள்ளன. இக்கோவிலின் தல விருட்சமாக தொரட்டி மரம் அமைந்துள்ளது.

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள அம்மன் கோவில்களில் முதன் முறையாக அம்மனின் உற்சவ மூர்த்தியை தங்க ரதத்தில் வைத்து பவனி வந்த சிறப்பும் இத்திருத்தலத்திற்கு உண்டு. மேலும் இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் அம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவளாக விளங்குகிறாள். செவ்வாய்க்கிழமைகள் ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றி 9 வாரம் வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். முடிவுக்கு வராத வழக்குகள் மற்றும் மனவேற்றுமையால் பிரிந்து சென்ற தம்பதிகளை இணைத்திடும் சக்தியாக, இத்திருக்கோயிலில் வீற்றிருக்கும் தண்டு மாரியம்மன் வணங்கப்படுகிறாள்.



Leave a Comment