இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி!


தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு அருள் வழங்கும் முப்பெரும் தேவிகளில் இச்சா சக்தி, சென்னைக்கு அருகிலுள்ள மீஞ்சூர் பக்கமுள்ள மேலூரிலும், ஞானசக்தி திருவொற்றியூரிலும், கிரியா சக்தி, திருமுல்லைவாயிலிலும் வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து காக்கும் தெய்வங்களாக அருள்பாலிக்கின்றனர்.

இச்சா சக்தியான திருவுடை அம்மன் சமேத மருந்தீஸ்வராகவும், ஞான சக்தியான வடிவுடையம்மன் சமேத வேதபுரீஸ்வரராகவும், கிரியா சக்தியான கொடியிடை அம்மன் சமேத மாசிலாமணீஸ்வரராகவும் தன்னைத் தஞ்சமென்று அடைவோரைத் தாங்கும் சக்திளாக வீற்றிருக்கின்றனர்.

பௌர்ணமி தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து தூய ஆடை உடுத்தி, பயபக்கதியுடன் மேலூர் சென்று, இச்சா சக்தி அம்மனை தரிசித்து, மஞ்சள் வஸ்திரம் சாத்தி, நெய் தீபமேற்றி, வெற்றிலைபாக்கு, தேங்காய், பழம், புஷ்பங்களுடன் அர்ச்சனை செய்தும், அடுத்து அதே நாள் மதியத்தில் திருவொற்றியூரில் காட்சியளிக்கும் வடிவுடையம்மனான ஞான சக்திக்கு, முன்போலவே நெய் தீபமேற்றி, சிவப்பு வஸ்தரம் சாத்தி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, புஷ்பங்களுடன் அர்ச்சனை செய்தும், மூன்றாவது திருமுல்லைவாயிலிலுள்ள கிரியா சக்தியான கொடியிடை அம்மனுக்கு, நெய் தீபமேற்றி, பச்சை வஸ்திரம் சாத்தி, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பங்களுடன் அர்ச்சனை செய்து வழிப்பட்டால் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களைத் தந்து அருள்வழங்குவர் இந்த சக்திகள்.

மேலும் தனிச்சிறப்பாக இந்த மூன்று தேவியரின் சிலைகளும், ஒரே பாறையிலிருந்து வெட்டி எடுக்கப்பெற்றவை, மேலும் மூன்று சிலைகளுமே ஒரே சிற்பியால் செதுக்கப்பட்டவை என்ற சிறப்பும் உண்டு.
இச்சா சக்தியான அம்மன், நமக்கு சக்தியையும், ஞான சக்தியான அம்மன், நமக்கு முக்தியையும், கிரியா சக்தியான அம்மன், வேண்டுவோர்க்கு பக்தியையும் தந்து அருள்பாலிக்கின்றனர்.



Leave a Comment