ஆடி முதல் வெள்ளி....
ஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை.
ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் ஆடி. 'கற்கடக மாதம்' என்று ஜோதிடம் ஆடியைக் கொண்டாடுகிறது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்தப் பெயர் உண்டானதாம். தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, `தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ என்று புராணங்கள் கூறுகின்றன.
பித்ரு லோகத்தில் வசிக்கும் பித்ருக்கள் அந்த லோகத்தைவிட்டு பூலோகத்துக்கு வரும் புண்ணிய காலம் ஆடி. ஆவலோடு தங்கள் சந்ததியைக் காண வரும் பித்ருக்களை வணங்கி வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. நதி, குளம், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி, திதி கொடுப்பது இந்த மாதத்தில் விசேஷமானது. அதுவும் ஆடி அமாவாசை அன்று செய்வது நலம் பயக்கும். இறந்துபோன முன்னோர்களை வணங்கி, அவர்களுக்கு விருப்பமான உணவைப் படையலிட்டு, ஏழை எளியோருக்கு அன்னதானம் அளிப்பது நல்லது.
`அரங்கனுக்கே ஆளாவேன்’ என்ற உறுதியுடன் வாழ்ந்த கோதை நாச்சியார் திரு அவதாரம் செய்த ஆடிப்பூரம் திருநாளில்தான், பார்வதி தேவி ருதுவான நாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினமே அம்பிகைக்கு வளைகாப்பும் செய்வார்கள்.
மாங்கல்ய பலமருளும் வரலட்சுமி நோன்பு மங்கையர்களின் விருப்பமான விழா. நாக தோஷங்களை விலக்கும் நாகசதுர்த்தி நாக தேவதைகளோடு, விநாயகரையும் வணங்கவேண்டிய நாளாகும். மொத்தத்தில் பக்தி விழாக்களின் தொடக்க மாதமாக ஆடி விளங்குகிறது. அதனால்தான் பெரியவர்கள் இந்த மாதத்தில் வேறு மங்களகரமான நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் விலக்கிவைத்தார்கள்.
பக்திக்கும் பண்டிகைக்கும் உரிய இந்த மாதத்தில் வீடு மாறுவதோ, சுப காரியங்கள் செய்வதோ பூஜைக்கு இடையூறாக இருந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம். மேலும் தேவர்களின் இரவு நேரம், பித்ருக்கள் நம்மை நாடிவரும் காலம், இந்த மாதத்தில் செய்யப்படும் ஜப தபங்கள் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பது போன்ற பல காரணங்களாலும் ஆடி மாதம் சுப காரியங்களைச் செய்ய விலக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், சகல தெய்வங்களின் பண்டிகைகளும் ஒருசேர வரப்போகும் இந்த ஆடி மாதத்தில் முடிந்தவரை எல்லா விழாக்களையும் கொண்டாடி வளமும் நலமும் பெறுவோம்!
Leave a Comment