குரங்குகள் வழிபடும் குண்டலகரணேசுவரர்!
பஞ்சதலங்களில் திருக்குரகாவல் தலமும் ஒன்று. மயிலாடுதுறை வைதீஸ்வரன் வோவில் அருகில் திருப்பனந்தாள் சாலை 'இளந்தோப்பு ' பகுதியில் அமைந்துள்ளது இச் சிவாலயம். இத்திருத்தலத்தில் மூலவராக குண்டலகரணேசுவரர் அருள்பாலிக்கிறார்.வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன. முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் சந்நிதிகள் உள்ளன.
முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கியும், வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதியும் உள்ளன. சிவன் சந்நிதி கருவறை வாயிலில் ஆஞ்சநேயர் கைகூப்பி நிற்கும் மூர்த்தம் உள்ளது. அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. இக்கோவிலை ஆஞ்சநயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது. மேலும் இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முற்பட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று. சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி ஆஞ்சநேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார்.
அதனால் ஒவ்வொரு அமாவாசையன்றும் இவரது சன்னதியில் ஹோமம் நடைபெற்றுவருகிறது. அப்போது பூக்களை ஏந்திவந்து குரங்குகள் பிரார்த்தனை செய்து செல்வது இன்றும் அதிசயச் செயலாக இத்திருத்தலத்தில் நிகழ்கிறது. மேலும் ஆஞ்சநேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், சூரியன் மற்றும் சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் ஆஞ்சநேயரையும் வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள். என்பது இத்திருத்தலத்திற்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை.
Leave a Comment