கவலை தீர ... நினைத்தது நடக்க! காளிகாம்பாள் தரிசனம்!


சென்னை பாரிமுனையில் உள்ள ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலில், வழிபட்டால், எல்லா சந்தோஷங்களும் நிறைந்திருக்கச் செய்வாள்.

சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த அற்புதமான தலம் இது. இங்கே உள்ள ஸ்ரீகமடேஸ்வரர் சந்நிதியும் ஸ்ரீமுருகப்பெருமான் சந்நிதியும் விசேஷமானது. ஸ்ரீகாளிகாம்பாள் கோயிலைப் பொறுத்தவரை, முன்று அம்பிகையர் குடிகொண்டிருக்கும் ஒப்பற்ற திருத்தலம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

மூலவராக குடிகொண்டிருக்கும் ஸ்ரீகாளிகாம்பாள் வரப்பிரசாதி. கருணைத் தெய்வம் இவள். இங்கே அவள், சாந்த சொரூபியாக காட்சி தந்து அருள்பாலிக்கிறாள்.

அடுத்து பிராகாரத்தில் உள்ள ஸ்ரீதுர்கையும் சக்தி மிக்கவள். ராகுகாலத்தில் துர்கை வழிபாடு விமரிசையாக நடந்தேறும். செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஸ்ரீதுர்கைக்கு ராகுகால வழிபாடு நடைபெறும். அப்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பெண்கள் பலரும் இங்கு வந்து, காளிகாம்பாளையும் துர்கையையும் வழிபடுவார்கள்.

அதேபோல், ஸ்ரீபிரத்தியங்கிரா தேவியின் பிரமாண்ட சுதைச் சிற்பமும் இங்கே உள்ளது. அமாவாசை பௌர்ணமி ஆகிய தினங்களிலும் செவ்வாய், வெள்ளி முதலான நாட்களிலும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு பூஜைகளும் பரிகார வழிபாடுகளும் நடைபெறுகின்றன .

ஸ்ரீகாளிகாம்பாளையும் துர்கையையும் பிரத்தியங்கிரா தேவியையும் தரிசிப்பதும் வழிபடுவதும் வாழ்வில் வளம் சேர்க்கும்! முடிந்தால், செவ்வரளி மாலை சார்த்தி வழிபடுங்கள். நலமும் வளமும் பெறுவீர்கள்! ஐஸ்வரியம் தந்து நிம்மதியுறச் செய்வாள் காளிதேவி என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.



Leave a Comment