தாலி பாக்கியம் அருளும் நித்திய சுமங்கலி மாரியம்மன்!


சித்தர்கள் வாழ்ந்ததாக கூறப்படும் அலவாய்மலை, போதமலை நயினாமலை ஆகிய நான்கு மலைகள் சூழ்ந்திருக்க நடுவே அமைந்துள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம். இந்த ராசிபுர சலையில் கிழக்கு பார்த்த சன்னதியாக காட்சியளிப்பதுதான் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி காலத்தில் கட்டப்பட்டது.

பண்டைய காலத்தில் விவசாயி ஒருவர் நிலத்தை உழுது கொண்டிருந்தபோது  கலப்பையில் ஒரு பொருள் தட்டுப்பட்டது. உடனே அந்த விவசாயி இடத்தை தோண்டிப்பார்த்த போது அங்கு ஒரு பீடமிருந்தது. தொடர்ந்து ஒரு குடிசையில் அந்த பீடத்தை வைத்து அப்பகுதி மக்கள் அம்மனாக வழிபட்டு வந்தனர். பின்னர் மாரியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அக்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் நோயால் அவதியுற்று படுத்த படுக்கையாக இருந்தான். மன்னனின் நோய் தீர அவன் மனைவி இத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் அம்மன் சன்னிதானத்திற்கு வந்து தன் கணவனை காப்பாற்றுமாறு கூறி, தான் அணிந்திருந்த தாலிக்கொடியை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு மாரியம்மளை வணங்கி அங்கேயே மயங்கி விழுந்து விட்டாள்.

பக்தையின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் மாரியம்மன் சிற்றரசனை குணமடைய செய்தாள். தன் மாங்கல்யத்தை காப்பாற்றிய அம்மனை நோக்கி எனது தாலி பாக்கியத்தை நிலைக்க செய்த சுமங்கலி மாரியம்மனே என்று அந்த பக்தை வணங்கியதால் இங்குள்ள மாரியம்மனுக்கு அப்பெயர் பெற்றதாக இத்திருத்தல வரலாறு கூறுகிறது.

மாரியம்மன் கோவில்களில் கருவறைக்கு எதிரே வேம்பு கம்பம் நடப்பட்டு இருக்கும் அவ்வேம்பு சிவனை குறிப்பதாக ஐதீகம். திருவிழா முடிந்ததும் இந்த வேம்பு கம்பத்தை நீர்நிலைகளில் சேர்ப்பார்கள். ஆனால் இத்திருத்தலத்தில் உள்ள சிவபெருமானின் வடிவில் இருக்கும் வேம்பு கம்பம் 365 நாட்களும் நடப்பட்டிருக்கும். ஆகையால் கணவனை விட்டுப் பிரியாமல் எப்போதும் சுமங்கலியாக இருக்கும் அம்பிகை என்று இத்திருக்கோயிலிலுள்ள அம்மன் போற்றப்படுகிறாள். எனவே இத்திருத்தலத்திற்கு வரும் பெண்கள் தங்கள் கணவர் உடல் நலம் பெற வேண்டியும், குடும்ப பிரச்சணைகளை தீர்க்க கோரியும் கோவிலில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து வந்து வேம்பு கம்பத்தில் ஊற்றி மஞ்சள், குங்குமம் வைத்து அம்மனை வேண்டி அருள் பெற்று வருகின்றனர்.



Leave a Comment