வணிகர்களுக்கு ஏற்றம் தரும் திருப்பயற்றுநாதர்!


திருவாரூர் - திருமகல் பேருந்து வழித்தடத்தில் வடகிழக்கே 12 கி.மீ தொலைவில் திருப்பயத்தங்குடி அமைந்துள்ளது. இத்திருத்தலத்தில் திருப்பயற்றுநாதர் மூலவராக வீற்றிருக்கிறார். உடன் தாயார் காவியக்கண்ணியும் காட்சியளிக்கிறார். சிலந்தி மரத்தைத் தலமரமாகக் கொண்ட இத்திருத்தலத்தில் தட்சிணாமூர்த்தியின் இருபுறமும் இரு முனிவர் வடிவங்களும் அவர்களுக்கு மேலே இரு பெண்கள் வடிவங்களும் அமைந்துள்ளன. மேலும் சித்தி விநாயகர், மற்றும் முருகன் வள்ளி தெய்வானையுடன் சமேதராக இத்திருத்தலத்தில் காட்சியளிக்கிறார்.

தல வரலாறு : சிவனடியாரான வணிகர் ஒருவர் மிளகு முட்டைகளை வண்டியில் ஏற்றிக்கொண்டு திருப்பயத்தங்குடி வழியாக வந்துகொண்டிருந்தபோது சங்கச்சாவடியில் அரசின் ஆணைப்படி மிளகு மூட்டைகளுக்கு அதிக வரியும், மற்றப் பொருள்களுக்கு வரிச்சலுகைகளும் தரப்பட்டிருப்பதை அறிந்தார். சுங்கவரி செலுத்தினால் தமக்கு பேரிழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்த வணிகர் மிளகு மூட்டைகளை பயிறு மூட்டைகளாக மாற்றி சுங்கச்சாவடி கடந்த பின் மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றித் தரவேண்டும் என சிவனிடம் வேண்டினார். பக்தனின் பிரார்த்தனைக் கேட்ப சிவனும் அவ்வாறே செய்தார். எனவே மிளகை பயிறாய் மாற்றியதால் இத்திருத்தலத்திற்கு திருப்பயிற்றூர் என பெயர் பெற்றது. திருப்பயிற்றூரே இன்று திருப்பயத்தங்குடி என வழங்கப்படுகிறது.

இத்திருக்கோயில் வைகாசி, விசாகம், ஆனித் திருமஞ்சனம் அடி வெள்ளி, நவராத்திரி, கார்த்திகை போன்ற விசேஷ நாட்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படும் மேலும் இத்தலம் வியாபார வளர்ச்சிக்கு உகந்த தலமாக விளங்குவதால், வணிகர்களுக்கு ஏற்றம் தரும் தலமாகத் திகழ்கின்றது.



Leave a Comment