சங்கடம் தீர்ப்பார் சனி பகவான்!


சனி பகவானை வணங்குங்கள். எள் தீபமேற்றி மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். நம் சங்கடங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி நமக்கு அருள்வார் சனீஸ்வரர்!

சங்கடம் தீர்க்கும் சனி பகவானே! மங்கலம் பொங்க மனம் வைத்தருள்வாய். என்று சனீஸ்வரரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

நாம் நினைப்பது போல, சனீஸ்வரரைக் கண்டு பயப்படவே தேவையில்லை. அன்பாளர். அருளாளர். நம் சங்கடங்களையெல்லாம் தீர்க்கக் கூடியவர். மங்கலம் பொங்கும் வாழ்வுதனைத் தந்தருளும் வள்ளல் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

முந்தையப் பிறவிப் பயன் என்பது நிச்சயம் உண்டு. இதை எந்தத் தருணத்தில் நாம் நம்புகிறோமோ இல்லையோ... சனீஸ்வர பகவான் விஷயத்தில் நம்பியே ஆகவேண்டும். ஏனெனில், நம் அத்தனைப் பிறவிகளின் பாவ புண்ணியக் கணக்குகளைப் பார்த்து, அதன்படி அருளக்கூடியவர் சனீஸ்வர பகவான் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

முந்தைய பிறவியில் ஏற்பட்ட வினைகள்தான், இப்போதைய நம் சந்தோஷங்களாகவும் சங்கடங்களாகவும் வருகின்றன என்பதை முதலில் நினைவு கொள்ளுங்கள். அதைக் கொண்டுதான் நம்மைச் சோதிப்பதிலும் சோதனைக்குள்ளாவதிலுமாகத் திகழ்கிறார் சனி பகவான்!

உரசினால்தான் தங்கத்தின் மதிப்பு தெரியும். அதுபோல் நம்மை சோதித்துப் பார்ப்பார் சனிபகவான். அப்படியான சோதனை காலத்தில், நாம் நேர்மையாகவும் நியாயமாகவும், உண்மையாகவும் சத்தியத்துடனும் இருந்தால், சனீஸ்வரரின் சோதனைப் பார்வை முடிவுக்கு வரும். முறையே சனீஸ்வரருக்கு எள் தீபமேற்றி, சனிக்கிழமைகளில் காகத்துக்கு எள் சாதம் படைத்து வந்தால், சனி பகவான் நம் மீதான கோபத்தில் இருந்து சற்றே தளர்த்தி அருள்வார் என்கின்றனர் ஆச்சார்யர்கள்.

சனிக்கிழமை என்றில்லாமல், எல்லா நாளும் சனி பகவான் காயத்ரியும், அவருக்கு உண்டான ஸ்லோகங்களையும் சொல்லி வந்தால், சனி பகவான் யோகம் தரும் தெய்வம் என்பதை உணர்ந்து, சிலாகிப்போம்.

எனவே சனிக்கிழமைகளில் தவறாமல் சனீஸ்வரரை வணங்கித் துதிப்போம். நம் சங்கடங்களையெல்லாம் விலக்கி, நமக்குச் சந்தோஷத்தைத் தந்தருள்வார் சனி பகவான்!



Leave a Comment