மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு


வைணவ திருத்தலங்களில் சிறப்புமிக்க ஒன்றாக போற்றப்படுவது மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோயில். இக்கோவிலில் வீற்றிருக்கும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக கருதப்படுகிறார். இத்திருக்கோயில் 6 கோபுரங்களுடன், 7 தூண்கள், 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்களால் அமைந்துள்ளது.

இத்திருத்தலத்தில் மூலவராக ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, செண்பக லெட்சுமி தாயாருடன் காட்சியளிக்கிறார். இக்கோவில் நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம் என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதனால் சென்பகாரண்யா க்ஷேத்திரம் எனவும், பெயர்பெற்றதாக இத்தல வரலாறு கூறுகிறது. மேலும் இந்தத் திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் அன்று அம்பாள் திருத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் தமிழகத்திலேயே, இரு வைணவத் திருத்தலங்களில் அம்பாள் திருத்தேர் உலா வருவார். ஒன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில். மற்றொன்று, மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோயில். மேலும் சன்னதியின் உள்ளிருந்தே திருத்தேர் பவனி வருவது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும்.அத்தகைய சிறப்புமிக்க இத்திருத்தலத்தில் இன்று (10-07-2018) ராஜகோபால சுவாமி திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் இத்திருத்தலத்திற்கு வருகைபுரிந்துள்ளனர்.



Leave a Comment