சனி தோஷங்கள் விலக்கும் பெருமாள் கோயில்


கரூர் மாவட்டம் பாளையம் அருகே உள்ளது தேவர்மலை. இரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மரின் கோபம் தணிந்த இடம் இது. இங்கே, `ஶ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள்’ என்ற பெயரில் காட்சிதருகிறார் பெருமாள்.

ஶ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலில் பெரிய கதவுகளுடன், கற்களை அடுக்கிக் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயிலைக் கடந்து சென்றால், இருபுறமும் பெரிய திண்ணை அமைந்திருக்கிறது. கோயிலில் மொத்தம் மூன்று ஸ்தூபிகள். ஒன்று வெளிப்புறத்திலும், மற்ற இரண்டும் உள்ளேயும் இருக்கின்றன. நுழைவாயிலுக்கு வலப்புறத்தில் ஒரு மண்டபம் இருக்கிறது.

செம்புத் தகட்டால் வேயப்பட்ட உயர்ந்த கொடிமரத்தைக் கடந்து சென்றால், மூலவர் சந்நிதியில் ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கம்பீரமாக வீற்றிருக்கிறார். மூலஸ்தானத்தின் அருகிலிருக்கும் மற்றொரு சந்நிதியில் கமலவல்லி தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

``இரண்யனை சம்ஹாரம் செய்த பின்னரும் சினம் தணியாமல் சீறி அலைந்த ஸ்ரீநரசிம்மரை, தேவர்கள் இங்கே ஆசுவாசப்படுத்தி அமரவைத்து, ‘மோட்ச தீர்த்தம்’ ஏற்படுத்தி, திருமஞ்சனம் செய்து சினம் தணித்தார்கள்.

ஸ்ரீ நரசிங்க பெருமாள் கோயில் மோட்ச தீர்த்தம்

மோட்ச தீர்த்தத்தில் மூழ்கி எழுந்தால், சனி பகவான் தொடர்பான தோஷங்கள் விலகிவிடும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி எழுவதற்குப் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திரளுவார்கள். இப்போதோ மோட்ச தீர்த்தத்தில் தண்ணீர்வரத்து அவ்வளவாக இல்லை. பக்தர்கள் அதிகம் வராததற்கு அதுவும் காரணமாக இருக்கலாம்.
தேவர்மலைச் சுற்று வட்டாரத்திலிருக்கும் எந்தக் கோயிலிலோ, வீட்டிலோ விசேஷம் என்றால், இந்த நரசிங்கர் ஆலயத்துக்கு வந்து அவரை வழிபட்டு, ‘மோட்ச தீர்த்த’த்திலிருந்து புனித நீர் எடுத்துச் செல்வது வழக்கம்.
ஸ்ரீகதிர்நரசிங்கப் பெருமாள் கோயிலைச் சுற்றிலும், சுண்ணாம்புப் பாறைக் கற்கள் காணக்கிடைக்கின்றன. கோயிலுக்கு வரும் பக்தர்கள், அந்தக் கற்களை உரசி, நாமம் போட்டுக்கொள்கிறார்கள்.

சினம் தணிந்த சாந்த ஸ்வரூபியாக அருளும் ஶ்ரீகதிர் நரசிங்கப் பெருமாளை தரிசித்து வழிபட்டால் மனதில் கோபம் என்பதே ஏற்படாது என்பது ஐதீகம்.



Leave a Comment