திருநள்ளாறில் குடமுழுக்கு திருப்பணிகள் தீவிரம்....
திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோயிலில் குடமுழுக்கு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குடமுழுக்கு, திருப்பணிகள் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெறும் பாலஸ்தாபன பூஜை நடைபெற்று உள்ளது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் ஸ்ரீ பிரணாம்பிகை அம்பாள் சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னிதி கொண்டு அனுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலுக்கு 2006-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மேலும் இக்கோயிலுக்கு சுற்றுக் கோயில்களாக விளங்கும் ஸ்ரீ ஆனந்தவிநாயகர் மற்றும் 4 வீதிகளிலும் அமைந்துள்ள விநாயகர்கள், நளன் குளம் அருகே உள்ள ஸ்ரீ நளன் கலிதீர்த்த விநாயகர், சுரக்குடி ஐயனார் கோயில், ரயில்வே பகுதியில் ஸ்ரீ பிடாரியம்மன், மாரியம்மன் கோயில்களுக்கு 2004-ஆம் ஆண்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.
இத்திருத்தலங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துவிட்டதையொட்டி, திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
கடந்த மாதம் 22-ஆம் தேதி சுற்றுக் கோயில்களுக்கான பாலஸ்தாபன பூஜை நடைபெற்றது. பிரதான கோயிலாக விளங்கும் ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் பாலஸ்தாபன பூஜை நிகழ்ச்சி புதன்கிழமை முதல் கால பூஜையுடன் தொடங்கியது.
கோயில் வெளிப் பிராகாரத்தில் ஸ்ரீ சொர்ணகணபதி, ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ தர்பாரண்யேசுவரர், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ பிரணாம்பிகை, ஸ்ரீ சனீஸ்வரர், ஸ்ரீ சண்டிகேசுவரர், ஸ்ரீ நடராஜர், ராஜகோபுரம் என 9 யாக குண்டங்கள் அமைத்து சிவாச்சாரியார்கள் முதல் கால பூஜை செய்தனர். தொடர்ந்து வியாழக்கிழமை காலை 7.30 முதல் 9 மணிக்குள்ளாக 2-ஆம் கால பூஜையாக மகா பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது.
தர்பாரண்யேசுவரர் கோயில் பணிகள் தொடக்கம் அடுத்த 15 நாள்களில் தொடங்கும் எனவும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடமுழுக்கு செய்யும் திட்டத்தில் பணிகள் முழு வீச்சில் செய்யப்படவுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
Leave a Comment