திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் திருமஞ்சன சேவை


திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலில் இன்று நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வைணவர்களின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. இக்கோவிலில் எம்பெருமான் மகாபாராதப் போரின்போது  பார்த்தனுக்கு தேரோட்டிய சாரதி வடிவில் காட்சி அளிக்கிறார். மேலும் இத்திருக்கோயில் 8ம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான ராஜா முதலாம் நரசிம்மவர்மன் மூலம் கட்டப்பட்டது. இக்கோவிலில் திருமாலின் அவதாரங்களில் ஐந்து அவதாரங்களான  நரசிம்மர், ராமர், வரதராஜர், ரங்கநாதர் மற்றும் கிருஷ்ணர் ஆகியோர் காட்சிதருகிறார்கள்.மேலும் இக்கோவிலில் வேதவள்ளி தாயார், ரங்கநாதர், ராமர், கஜேந்திர வரதராஜ சுவாமி, நரசிம்ம, ஆண்டாள், ஆஞ்சநேயர், ஆழ்வார்கள், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. கோவில் கருவறையில் மூலவர் வேங்கட கிருஷ்ணர் தவிர ருக்மிணி பிராட்டி, பலராமன், சத்யகி, அனிருத்தன், பிரத்யும்னன் என்று குடும்ப சமேதகராக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்கள். இக்கோவிலின் மூலவரான பார்த்தசாரதியின் விக்கிரகத்தை அகத்திய மாமுனிவர் பிரதிஷ்டை செய்ததாக கருதப்படுகிறது.

மேலும் இத்திருதலத்தில் மூலவர் பார்த்தசாரதிக்கு நேர் பின்புறமாக யோக நரசிம்மராக சிங்கப் பெருமாள் காட்சியளிக்கிறார். இவருடைய சந்நிதியில் தீர்த்தம் மேலே தெளிக்கப்பட்டால் தீயசக்திகள் அனைத்தும் ஓடிவிடுமென்பது பக்தர்களின் நம்பிக்கை. அத்திரி முனிவருக்கும் காட்சி தந்த கோலத்தில் இருப்பதால் இவரைத் தெள்ளிய நரசிம்ம சுவாமி என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். அத்தகைய சிறப்புமிக்க நரசிம்மருக்கு திருமஞ்சன சேவை மற்றும் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டு எம்பெருமானின் அருளைப் பெற்று வருகின்றனர்.

 



Leave a Comment