மலைக்கொழுந்தீஸ்வரரின் அதிசய ஆலயம் !


சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ளது மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம். புராண மற்றும் புராதனச் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயம் ஓர் அதிசய குடைவரைக் கோயிலாகும்.
ராமரும் சீதையும் தங்களது பயணத்தின்போது இந்த மலையில் ஒரு நாள் தங்கிவிட்டுச் சென்றதாக தலபுராணம் கூறுகிறது. கருவறையில் மலைக்கொழுந்தீஸ்வரரும் வெளியே வலப்புறமாக அம்பாள் பாகம்பிரியாளும் வீற்றிருக்கின்றனர். மன்னர் காலத்தில் இந்தக் கோயிலைப் பாதுகாத்து வந்த மாவீரன் கருவபாண்டியனுக்குக் கோயில் வாசலிலேயே சிலை வைத்திருக்கிறார்கள். இந்தக் கோயிலை வணங்க வருபவர்களை இரு கைகூப்பி வணங்கி வரவேற்கும் வடிவில் அமைந்துள்ளார் அவர்.

இங்கு வற்றாத சுனை ஒன்று உள்ளது. இந்தச் சுனை நீரால்தான் மலைக்கொழுந்தீஸ்வரர் மற்றும் அம்பாள் பாகம்பிரியாளுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்தக் கோயில் பகுதி, மூன்று அடுக்குகள் கொண்டது. மலையின் மேற்புறம் 2-வது அடுக்கில் பம்பர வடிவில் ஒரு மலை உள்ளது.

இதை ஒட்டி வளர்ந்துள்ள புளிய மரத்தின் கீழே புளியமரத்து முனீஸ்வரர் இருக்கிறார். அதன் முன்புறம் சமணர்களால் நடப்பட்ட நடுகல் ஒன்று உள்ளது. மூன்றாம் அடுக்கில் கார்த்திகை தீபம் ஏற்றும் கம்பம் உள்ளது.

இங்குள்ள தெப்பக்குளத்தில் குளித்தால் காசியில் உள்ள கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும் என்றும், கோயிலுக்கு வந்தால் மனக் கஷ்டங்கள், குடும்பப் பிரச்னை நிவர்த்தி ஆகி விடுகிறது என்கின்றனர் பக்தர்கள்.

இந்தக் கோயிலுக்கு சிவகங்கையிலிருந்தும், திருப்பத்தூரிலிருந்தும் வரலாம். செவ்வாய், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் விசேஷ பூஜைகள் உண்டு.



Leave a Comment