திருப்பதி ஏழுமலையானுக்கு நடக்கும் தோள் மாலை சேவை


திருமலையில் சுப்ரபாத பூஜையை அடுத்து, காலை 3.30 முதல் 3.45 வரை சன்னதியை திரை போட்டு மறைத்து, சுத்தி எனப்படும் தூய்மை செய்யும் பணி நடக்கும். அந்த நேரத்தில் முதல் நாள் சுவாமிக்கு அணிந்த மாலைகளை கோயிலுக்கு பின்னால் உள்ள பூக் கிணறில் கொண்டு சேர்ப்பார்கள்.

பின்னர் புதிய மாலைகள் சுவாமிக்கு கொண்டு வரப்படும். இதைக் கொண்டுவர ஜீயங்கார் என்பவர் உள்ளார். ஜீயங்காருக்கு உதவியாக ஏகாங்கி என சொல்லப்படுபவர் இருக்கிறார். ஜீயங்கார் முன்னால் நடக்க ஏகாங்கி பின்னால் வருவார். கூடவே முரசு வாத்தியத்துடன் ஒருவர் செல்வார்.

இவர்களுக்கு பின்னால் பள்ளி எழுச்சி பாட இருவர், திருப்பாவை பாட இருவர், புருஷ ஸுக்தம் சொல்ல இருவர் என ஒரு கோஷ்டியே திரண்டு வரும். பூ கட்டுவதற்கு என “யமுனாதுறை” என்ற இடம் கோயிலில் இருக்கிறது. அங்கிருந்து பூமாலைகள் சுவாமிக்கு அணிவதற்காக எடுத்து வரப்படும். காலை 3.45 மணிக்கு “தோமாலை சேவை” ஆரம்பமாகும்.

சன்னதிக்கு பூக்கூடை வந்தவுடன் அர்ச்சகர் சுவாமியின் மார்பில் இருக்கும் மகாலட்சுமிக்கு முதலில் பூச்சரத்தை சாத்துவார். பின்னர் சுவாமிக்கு மாலைகள் சாத்தப்படும். பெருமாளுக்கு மாலை சாத்தி முடித்து அடுக்கு தீபாராதனை செய்யப்படும். இதற்கு 25 நிமிடம் ஆகும். அதுவரை ஜீயங்காரும் மற்றவர்களும் திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை பாசுரங்களை பாடுவார்கள்.
இந்த சேவை ராமானுஜர் காலத்தில், “தோள் மாலை சேவை என சுத்த தமிழில் அழைக்கப்பட்டது. பின்னர் தெலுங்கில் “தோமாலா சேவா என மாறிவிட்டது.



Leave a Comment