சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சனம் உத்ஸவம் கொடியேற்று விழா


சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை ஆனி திருமஞ்சனம், மார்கழி ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழாக்கள் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தரிசனம் நடைபெறுகிறது. இதனையொட்டி செவ்வாய் காலை கோயிலில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித் சபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து, செவ்வாய்க்கிழமையான இன்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் உற்சவ ஆச்சாரியார் து.என்.எஸ்.சந்திரசேகர தீட்சிதர் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த உற்ஸவம் தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. வருகிற 20-ம் தேதி (புதன்கிழமை) தேர்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

21-ம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது.

22-ம் தேதி பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்ஸவம் முடிவடைகிறது. உற்ஸவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்களின் செயலர் ஜெ.ந.நடேஸ்வர தீட்சிதர், துணைச் செயலர் ஜி.பி.மகாதேவ தீட்சிதர் ஆகியோர் செய்துள்ளனர்.



Leave a Comment