சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்க...
செங்கல்லில், ‘ராமநாமம்’ எழுதி, தலையில் வைத்துக் கொண்டு படியேறி அனுமனைத் தரிசித்தால், விரைவில் வீடு மனை வாங்கும் யோகம் கிடைக்கும். சொந்த வீடு வாங்குவது உறுதி என்கிறார்கள் பக்தர்கள்!
சென்னை தாம்பரத்தை அடுத்த வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் வழியில் 12 கி.மீ. தூரத்தில் புதுப்பாக்கம் மலை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவிடந்தை ஆதிவராக சுவாமி (நித்திய கல்யாணப் பெருமாள்) தலத்தின் ‘பரிவேட்டை’ தலமாகவும் புதுப்பாக்கம் ஆலயம் உள்ளது. எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு என்று ஒன்றைச் சொல்கிறார்கள் பக்தர்கள். அதாவது, வீரஆஞ்சநேயர் திருத்தலத்தில் பக்தர்களுக்கு வலம்புரிச் சங்கில் தீர்த்தம் கொடுப்பது தனிச்சிறப்பு.
பௌர்ணமி தோறும் இரவு நேரத்தில், ஆஞ்சநேயர் இந்த கஜகிரி மலையை கிரிவலம் வருவதாக ஐதீகம். ஆகவே அப்போது பக்தர்களும் கிரிவலம் வந்தால் நாம் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை!
அமாவாசை நாளில் புதிய செங்கல்லில் ராமநாமம் எழுதி, அதனை தலையில் வைத்துக் கொண்டு, படியேறி வந்து அனுமனை வழிபட்டால் விரைவில் வீடு வாங்கும் யோகம் கூடிவரும் என்கிறார்கள் பக்தர்கள்!
மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாட்களில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, வடை மாலை சார்த்தி வழிபட்டால் காரியத் தடைகள் அகலும் திருமணத் தடைகள் அகலும்.
நல்ல வேலை கிடைக்கவும், வேலையில் பதவி உயர்வு கிடைக்கவும், செவ்வாய்க்கிழமை மாலை வேளைகளில் அனுமனுக்கு வெண்ணெய் சார்த்தி, அருகம்புல்லுடன் வெற்றிலை வைத்துக் கட்டிய மாலையை ஆஞ்சநேயருக்கு சூட்டி வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
பௌர்ணமி கிரிவலமும் இங்கே சிறப்பாக நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் அருகிலேயே திருவெளிச்சை சிவன் கோயிலும், மாம்பாக்கம் தெய்வநாயகி சமேத முருகநாதீஸ்வரர் கோயிலும் உள்ளன. ஆகவே, புதுப்பாக்கம் அனுமனையும் இந்த சிவாலயங்களிலும் சிறப்புறத் தரிசனம் செய்யுங்கள். சீரும் சிறப்புமாக வாழ்வீர்கள்!
Leave a Comment