கிரிவலப்பாதையில் அருள்பாலித்த கழுகாசலமூர்த்தி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குடவரை கோவிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, காலசந்தி பூஜை நடந்தது.
காலையில் கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். பக்தர்கள் கிரிவலப்பாதை வழியாக கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மதியம் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து உச்சிகால பூஜை நடந்தது.
இரவில் சுவாமி- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் சப்பரத்தில் எழுந்தருளி, கிரிவலப்பாதை வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் மாலையில் திரளான பக்தர்கள் கிரிவலப்பாதை வழியாக கும்பிடுசேவை செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கார்த்தீசுவரன் தலைமையில், கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.
Leave a Comment