வைகாசி விசாகம் பற்றிய புராண கதை


பராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த அறுவரும் ஒருநாள் நீர்நிலையில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து தங்கள் மனம் போனபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த ஜீவன்களான மீன்கள், தவளைகள் மிகவும் துன்பப்பட்டன.

அதனைக் கண்ட முனிவர், "நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார். தந்தைச் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் அந்தக் குழந்தைகள். அதனால் மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார்.

அவர்கள் ஆறு மீன்களாக மாறி அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர். ஒருசமயம், சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள்.

ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும் விதமாக மீண்டும் வழிபட்டபோது "நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர். பராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீங்கி இன்பம் பெறுவர் என்று புராணங்கள் கூறுகின்றன. வைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும்.

இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம். வைகாசி விசாகம் புத்தர் அவதரித்த நாளாகவும் கூறப்படுகிறது. சித்தார்த்தர் புத்தரானதும், நிர்வாணமடைந்ததும் இதே வைகாசி விசாக நாளில்தான். இத்தகைய சிறப்பு வைகாசி விசாக நாளில் முருகன் ஆலயத்திற்கு சென்று வழிபடலாம்.



Leave a Comment