திருச்செந்தூர் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா மே 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, கோயில் நடை அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகின்றன.
மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. அதையடுத்து, மகா தீபாராதனையாகி, தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்ந்து திருவிழா நிறைவடைகிறது.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (மே 27), செவ்வாய்க்கிழமை (மே 29) ஆகிய நாள்களில் கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
Leave a Comment