திருச்செந்தூரில் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது
திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி வசந்த திருவிழா கோலாகலமாக துவங்கியது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழா, ஆண்டுதோறும் கொண்டாடப்படும் முக்கியத் திருவிழாக்களில் ஒன்று.
இதை முன்னிட்டு, காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி ஜெயந்திநாதர், திருக்கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி, வசந்த மண்டபத்தை அடைகிறார்.
மாலையில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைக்குப் பிறகு 11 முறை வசந்த மண்டபத்தை வலம் வரும் வைபவம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளி கிரிவலம் வந்து கோயிலை அடைகிறார். 10 நாள்களும் தினமும் உச்சிக்கால பூஜைக்குப் பின் சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளலும், பூஜைகளுக்குப் பின்னர், தங்கத்தேரில் எழுந்தருளி திருக்கோயிலை அடைவதும் நடைபெறுகிறது.
இத்திருவிழாவின் 10-ம் நாளான வரும் மே 28-ம் தேதி, வைகாசி விசாகத் திருவிழாவன்று, அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம் மற்றும் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. விசாகத் திருவிழாவை முன்னிட்டு வரும் மே 27 முதல் 29-ம் தேதி வரை, 3 நாள்கள் பூஜைக் காலங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
Leave a Comment