வால் இன்றி காட்சி தரும் அதிசய அபய ஆஞ்சநேயர் ....
ராமேஸ்வரத்தில் உள்ள இந்த அதிசய ஆஞ்சநேயர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும், சக்தி வாய்ந்ததும் ஆகும். இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் சுயம்புவாக கடல் மண்ணினால் கடல் சிப்பிகள் கலந்த உருவத்துடன் ஆன சிலையாக இருக்கின்றார். அவருடைய பலம் வாய்ந்த வால் இன்றி காட்சி தருகின்றார்.
இங்கு இவரே பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் எவரும் இல்லை. இந்த பிரம்மச்சாரியிடம் வேண்டினால், புத்திர பாக்கியம் கிட்டும் என்பதும், பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் மனக்குழப்பங்கள், குடும்ப ஒற்றுமை சீரடையும் என்பதும் நம்பிக்கை.
மூலஸ்தானத்தில் வால் இன்றி ஒரு ஆஞ்சநேயரும், மற்றொரு ஆஞ்சநேயர் முழு உருவத்துடன் கம்பீரமாக காட்சி தருகின்றார். இவருக்கு அபய ஆஞ்சநேயர் என்ற பெயர் சூட்டி அழைக்கின்றனர்.
இவரது சிலையின் அடியில் ஒரு கோடி ராம ரஷ மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது மிகவும் அற்புதமானதாகும். இவர் பக்தர்களின் பயத்தை போக்கி, பலத்தைக் கொடுப்பதால், அபயம் கொடுக்கும் அபய ஆஞ்சநேயர் என்று பெயர் பெற்றார்.
இந்த தலத்தின் வரலாற்றை ஆராயும் பொழுது, சுவாரஸ்யமான தகவல்கள் அறியப் பெறுகின்றோம்.
ராவணன் சீதையைக் கவர்ந்து இலங்கைக்கு எடுத்துச் சென்றான். பின்னர் ராமபிரான் அவனுடன் சண்டையிட்டு அவன் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுத்து, ‘இன்று போய் நாளை வா’ என்று வாய்ப்பு கொடுத்தும் உயிரைவிட்டான். ராவணன் சிவபக்தன் என்பதால், ராமபிரானுக்கு சிவ பக்த தோஷம் பிடித்தது. அதை நிவர்த்தி செய்ய, ராமேஸ்வரத்தில் சிவலிங்க பூஜை செய்ய உத்தேசித்து சிவபெருமானை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார்.
ஆஞ்சநேயரை வேண்டி அனுபவம் பெற்று அருள் பெற்றவர்கள் வெற்றிலை, வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்து நேர்த்திக்கடனை நிறைவு செய்கின்றனர். கோவிலின் பின்புறம் ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தக் குளம் உள்ளது. அதன் அருகில் தல விருட்சமாகிய அத்திமரம் இருக்கின்றது. அதில் இளநீரை கட்டி தங்கள் வேண்டுகோளை ராம பக்தர்கள் என்றும் சிரஞ்சீவியாக இருக்கின்ற அநுமனிடம் வைத்து செல்கின்றனர். அதிகபட்சமாக, ஒரு பௌர்ணமி முடிவடையும் முன்பு, அவர்களது இன்னல்கள் தீருகின்றன. நோய்கள் ஓடிப்போகின்றன. மனதிற்கு அமைதி கிடைக்கிறது. குடும்ப வாழ்க்கை எதிர்பார்த்தபடி அமைகின்றது. இது இத்தலத்தின் ஆஞ்சநேயரின் சக்தி என்கின்றனர்.
பின்னர் அடுத்த முறை இத்தலம் வரும்பொழுது புதிய இளநீரால் இந்த தலத்தின் மூர்த்தியாகிய ஆஞ்சநேயரை அர்ச்சனை செய்து வணங்கி செல்கின்றனர். இந்த தலத்தில் சற்று உக்கிரத்துடன் முதலில் சிவபெருமான் சிலையை எடுக்க முயன்றதால், உக்கிர மூர்த்தியாக இருந்ததால், அவரை குளிர்விக்க இந்த இளநீர் அபிஷேகம் செய்யப்படுகிறது என்கின்றனர்.
இங்கு ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையும் தொடர்ந்து மூன்று வாரம் அர்ச்சனை செய்ய அதிக அளவு பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.
இந்த தலத்தில் முக்கிய விழாவாக அனுமன் ஜெயந்தியும் ராமநவமி, தமிழ், ஆங்கில வருடப்பிறப்பு கொண்டாடப்படுகிறது.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை, ஆனி ரேவதி நட்சத்திரம் மற்றும் அனுமன் ஜெயந்தி தினங்களில் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. தினமும் காலை 7 மணி முதல் பகல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டிற்கு கோவில் திறந்து இருக்கும்.
புத்திர்பலம் யஸோதைர்யம் நிர்பயத்வ!
மரோஹதா அஜாட்யம் வாக்ப டுத்வம்ஸ
ஹநுமத் ஸ்மரணத் பவேத் ஹயக்ரீவ அக்ரீவ
யோவதேத் தஸ்ய நிஸ்ரதே வாணு ஜன்னு கன்யா பிரவாஹத் !
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் மேற்கு வாசலில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கிருந்து செல்ல வாகன வசதி உள்ளது.
Leave a Comment