வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு
வைகாசி மாத பூஜைக் காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, திருவிழா நாட்கள் தவிர, ஒவ்வொரு தமிழ் மாதத்தின் (மலையாள மாதத்தின்) முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள்-வழிபாடுகள் நடை பெறும். எனவே இந்த நாட்களில் திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமியை தரிசனம் செய்து செல்வார்கள்.
அதன்படி வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி (பொறுப்பு) மனு நம்பூதிரி முன்னிலையில், மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, தீபாராதனை காட்டினார். அப்போது சன்னிதானத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர். நேற்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கோவில் கருவறை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் சுத்தம் செய்யும் பணிகள் நடை பெற்றது.
இன்று முதல் தினமும் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடை பெறும்.
19-ந் தேதி வரை படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்றவைகளும் நடைபெற உள்ளன. 19-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10.30 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.
Leave a Comment