மழலை வரமருளும் மறுகால்தலை சாஸ்தா


நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அருகேயுள்ள மறுகால்தலை கிராமத்தில் அருட்பாலிக்கும் ஸ்ரீபூலுடையார் சாஸ்தா, தன்னை நம்பி வரும் பக்தர்களுக்கு புத்திர பாக்யம் அருள்கிறார். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை சேர்ந்த ஏழு பேர், சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தமாக மலையாள நாட்டிற்கு செல்கின்றனர்.

அங்கிருந்து பொருள் ஈட்டி புறப்படும் தருவாயில் அந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் இவர்களை திருடர்கள் என நினைத்து, இவர்களை தாக்கி பொருட்களை மீட்க முற்படுகின்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திரண்டு இவர்களை துரத்த, இவர்கள் அப்பகுதியில் ஓங்கி உயர்ந்து அடர்த்தியாய் வளர்ந்து நின்ற பூலாத்தி செடிகள் நிறைந்த புதருக்குள் நுழைந்து மறைவாக இருக்கின்றனர். துரத்தி வந்தவர்கள் புதர் அருகே வந்து பார்க்கின்றனர். யாருடைய தலையும் தென்படவில்லை.

அப்போது யானை மிளிரும் சத்தம் கேட்க, வந்தவர்கள் அவ்விடம் விட்டு உடனே அகன்றனர். கூட்டத்தினர் கலைந்ததும் புதர் மறைவிலிருந்து வெளியே வந்தவர்கள் தப்பித்தோம் என்று பெருமூச்சு விடும்போது அவர்கள் கண்ணில் பச்ச மண்ணால் செய்த சாஸ்தா சிலை தென்பட்டது. இந்த சாமி தான் நம்மை காப்பாற்றியது. யானை வாகனத்தான் சாஸ் தாதான். ஆகவே நம்மை காப்பாற்றிய இந்த சாஸ்தா வை நமது ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி, அந்த சிலையை எடுத்துக்கொண்டு ஊருக்கு புறப்படுகின்றனர்.

மலையாளநாடு விட்டு, நாஞ்சில்நாடு கடந்து அஞ்சு கிராமம், ராதாபுரம், திசையன்விளை, சாத்தான்குளம் அடுத்து அமுது உண்ணாகுடி கிராமம் வருகின்றனர். அங்கு சிலையை இறக்கி வைத்து விட்டு, உணவு சமைத்து உண்கின்றனர். உண்டு களித்து ஓய்வு எடுத்த பின் மீண்டும் பயணத்தை தொடர, சிலையை எடுக்க முற்படும்போது அந்தப் பகுதியில் படர்ந்திருந்த சுரைக்காய் செடி தட்டிவிட சிலையின் கால் பாதம் பகுதி உடைந்து விழுந்தது.

பாதம் உடைந்த சிலையோடு பயணத்தை தொடர்ந்தனர். மதிய உணவுக்காக சமைக்க தென்திருப்பேரை அடுத்த கடம்பாகுளம் கரையில் சிலையை இறக்கி வைக்கின்றனர். மதிய உணவு உண்டுவிட்டு அங்கிருந்து புறப்படுகையில் சிலையை எடுக்கும்போது சிலையின் இடுப்புக்குக் கீழ்பகுதி அவ்விடமே பதிந்து விடுகிறது. சிலையின் தலை மற்றும் மார்புடன் கூடிய பகுதியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்படுகின்றனர். ஸ்ரீ வல்லப ஏரியின் மறுகால் பாயும் தலைப்பகுதியில் (சீவலப்பேரி) உள்ள மலை மேலுள்ள பாறை மீது கொண்டு வந்த சாமி சிலையை வைத்துவிட்டு ஏழு பேரும் தங்கள் ஊரான மணியாச்சிக்கு சென்று விடுகின்றனர். உடைபட்ட சிலையை ஊருக்குள் கொண்டு போகக் கூடாது என்பதால் வனத்தில் வைத்து விட்டு சென்றுவிட்டனர்.

நாட்கள் சில நகர்ந்த நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த மணியாச்சி ஜமீன் வீட்டு பசு மாடு ஒன்று தினமும் மலையேறி சுவாமி சிலைமேல் பாலை தானே சொரிந்து சென்றது. வாரம் ஒன்று கடந்த நிலையில் பால் கறந்த கோனார், ஜமீனிடம் குறிப்பிட்ட அந்த பசுமாடு மட்டும் காலையில் பால் கறக்கிறது. மாலையில் மடுவில் பால் இல்லை என்று கூறுகிறார். உடனே ஜமீன் அந்த மாட்டிலிருந்து பாலை யாராவது கறக்கிறார்களா? அல்லது மாடுகள் மேய்க்கும் நபர்கள் இருவரும் பாலை கறந்து விற்கிறார்களா என்று பார்த்து வர, ஐந்து நபர்களை ஜமீன் அனுப்புகிறார். அன்று மாலை வழக்கம்போல அந்தப் பசு, மலைமேலிருந்த சாஸ்தாவின் சிலைக்குப் பால் சொரிந்தது. பார்த்தவர்களும், மாடுகளை மேய்த்தவர்களும் வியப்புற்றனர். இந்தத் தகவலை
ஜமீனுக்கு தெரிவிக்கின்றனர். அவரும் வந்து மறுநாள் பார்க்கிறார். அவருடன் ஊரார்கள் திரண்டு வந்து பார்க்கின்றனர். அவர்களுடன் சிலையை கொண்டு வந்த ஏழு பேர்களும் பார்க்கின்றனர்.

பசுவின் செயலும், சுவாமி சிலையின் மகிமையையும் கண்டு மெய் சிலிர்த்து நிற்கையில், கூட்டத்தில் அருள் வந்து ஆடிய ஒருவர், தான் சாஸ்தா என்றும், எனக்கு இங்கே பூரண, புஷ்கலையுடன் சிலை அமைத்து கோயில் எழுப்ப வேண்டும் என்றும் எனது கோட்டைக்கு காவலாய் கருப்பன், சுடலை மாடன் உள்ளிட்ட இருபத்தியோரு பந்தி தெய்வங்களுக்கும் நிலையம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அதன்படியே கோயில் எழுப்பப்பட்டது. ஏரியின் மறுகால் பாயும் தலைப்பகுதி என்பதாலும், ஏரியின் மறுகால் பகுதியில் சுவாமியின் தலை இருந்ததாலும் இந்த ஊர் மறுகால்தலை என்று அழைக்கப்பட்டது. பூலாத்தி
செடிகளிடையே இருந்து கண்டெடுக்கப்பட்டதால் இவ்விடம் உள்ள சாஸ்தா பூலாத்தி செடி இடை கண்டெடுத்த சாஸ்தா என்றும் பூலாத்தி இடை சாஸ்தா என்றும் அழைக்கப்பட்டார். அது மருவி பூலுடையார் சாஸ்தா என்று அழைக்கப்படலானார்.

இக்கோயிலில் காவல் தெய்வமாக முதன்மை பெற்று திகழ்பவர் கொம்பு மாடசாமி. இக்கோயிலில் வீற்றிருக்கும் சுடலைமாடன் மீது பக்தி கொண்ட இப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அங்குள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். தோட்டத்துக்காரர் கூலிப் பணமும், தனது தோட்டத்தில் விளைந்த கத்தரிக்காய்கள் கொஞ்சம் கொடுத்து அனுப்பினார். தலையில் காய்ஞ்ச விறகும் முந்தானையில் கத்தரிக்காய்களையும் முடிந்துகொண்டு வீட்டுக்கு நடந்து வருகிறாள். வழியில் எதிரே வந்த அப்பகுதியிலே பெரிய தோட்டப் பண்ணைக்காரர், அந்த பெண்ணின் முந்தானைப்பகுதி பெரிதாக இருப்பதை பார்த்துவிட்டு, ‘‘என்னம்மா ஆளு கொஞ்சம் அசந்தா தோட்டத்தையே இல்லாம ஆக்கிருவீங்களா’’ என்று சத்தம் போட்டார். அதற்கு அந்த பெண், ‘‘ஐயா, இது நான் வேலைப்பார்த்த தோட்டத்தில உள்ளது. பண்ணையாருதான் எனக்கு கூலிய கொடுக்கும் போது கொடுத்து அனுப்பினாரு’’ என்றாள். அதை கேட்க மறுத்த அவர். இல்லை, இல்லை இது என் தோட்டத்து காய்கள் தான். என்கிட்ட பொய்யா சொல்லுத என்று பேசினார்.

கண்களில் கண்ணீர் மல்க, அந்த பெண் கூறினாள். ‘‘ஐயா, நான் கும்பிடுற பூலுடையார் கோட்டையில் காவல் காக்கிற அந்த சுடலைமாடன் சாமி மேல சத்தியமா சொல்லுதேன். உங்க தோட்டத்திலிருந்து நான் கத்தக்காய களவாங்கல’’ என்று அதற்கு அந்த தோட்டத்துக்காரர் ‘‘உங்க சாமிய கொண்டு சத்தியம் பண்ணினா உட்டுருவினா,’’ அப்போது அந்த பெண் ‘‘எங்க சாமி தப்பு பண்ணினா யாரையும் தண்டிக்கிறவரு, அவர மிஞ்சுன நியாயவான் யாருமில்ல.’’ அப்போது குறுக்கிட்ட தோட்டக்காரர் ‘‘உங்க சாமிக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு’’ என்று கேட்டார். அந்த பெண், ‘‘ஐயா, இன்னத்த பொழுது முடிஞ்சு நாளைக்கு காலையில வந்து சொல்லுங்க நான் உங்க தோட்டத்தில திருடுனேன்னு. அதுவரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருங்க, என் சாமி உங்களுக்கு நான் திருடலங்கிறதுக்கு அறிகுறி காட்டுவாரு, அப்புறும் நீங்க என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கிறேன் என்றாள். ஊரு கூட்டத்தில சொல்லி அவமானப்படுத்தினாலும் ஏத்துக்கிறேன்.’’ என்றாள். ‘‘சரி, போ, நாளை விடியட்டும்’’ என்று மிரட்டும் தோணியில் பேசினார்.

மறுநாள் காலை எழுந்து தோட்டத்துக்காரர் தோட்டத்துக்கு சென்றார். அங்கே செடியில் முளைத்திருந்த அத்தனை கத்திரிக்காய்களிலும் இரண்டு கொம்பு முளைத்திருந்தது. அதனை கண்டு திடுக்கிட்டவர் ஓடோடி வந்து அந்த பெண்ணிடம் ‘‘உண்மை தெரியாம உன்னை சந்தேக பட்டுட்டேன் தாயி, என்னை மன்னிச்சிடு ஆத்தா’’ என்று கூற, அந்த பெண், ‘‘என் சுடல மாடசாமி … ’’என்று மெய் உருகி கத்திய படி, அந்த பெண், தோட்டத்துக்காரர், ஊர்க்காரர்கள் என எல்லோரும் பூலுடையார் சாஸ்தா கோயிலுக்கு வர, அங்கே சுடலைமாடசுவாமி பீடத்தின் தலையில் இரண்டு கொம்பு முளைத்திருந்தது. தோட்டத்துக்காரர் சாமியின் முன்பு மண்டியிட்டு மனம் வருந்தி மன்னிப்பு கேட்டார். அன்றிலிருந்து இக்கோயில் சுடலைமாடசாமி, கொம்பு மாடசாமி என்று அழைக்கப்படலானார். தளவாய்மாடசாமி தான் கொம்புமாடசாமி என்று அழைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சாஸ்தாவின் சிலை உடைய காரணமான சுரைக்காயை, பூலுடையார் சாஸ்தாவை வழிபட்டு வரும் வம்சா வழியினர், பக்தர்கள் உணவில் பயன்படுத்துவது இல்லை. இக்கோயிலில் மூலவர் ஸ்ரீபூலுடையார் சாஸ்தா பூரண, புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். தவசி தம்புரான், லாட சந்நியாசி, வீரபத்திரர், சப்த கன்னியர், தளவாய்மாடன், கொம்பு மாடசாமி, சுடலைமாட சாமி, தளவாய்போத்தி, பேச்சியம்மன், ஆழி போத்தி, சங்கிலி பூதத்தார், மலையழகு அம்மன், மலை விநாயகர் ஆகியோர் மலையிலும், மலையின் கீழே சிவனணைந்த பெருமாள், கருப்பசாமி, பலவேச கருப்பசாமி, தளவாய்மாடன், சப்பாணி மாடன், பட்டவராயன் கொம்பு மாடன், கொம்பு மாடத்தி ஆகிய காவல் தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

இங்குள்ள சாஸ்தாவுக்கு கோயிலில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் ஓடும் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்படுகிறது. 1912ம் ஆண்டு முதல் பிச்சை வேளார் மற்றும் அருணாசல வேளார் வம்ச வழியினர் தினமும் ஆறு கி.மீ. தூரம் சென்று தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்து பூஜை செய்கின்றனர். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் அருள்கிறார் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா. இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. மேலும் திருக்கார்த்திகை அன்று தீப திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோயில் நெல்லை சந்திப்பிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சந்திப்பிலிருந்து புளியம்பட்டி, தவளாப்பேரி பேருந்துகளில் சென்றாஷல் சீவலப்பேரியை அடுத்த ஊர் மறுகால்தலை. இங்கு தான் ஸ்ரீ பூலுடையார் சாஸ்தா வீற்றிருக்கிறார்.



Leave a Comment