சபரிமலையில் மே 14-ல் நடை திறப்பு


சபரிமலை ஸ்ரீஐயப்பன் திருக்கோயிலில், வைகாசி மாத சிறப்பு பூஜைகளுக்காக மே 14 ஆம் தேதி நடை திறக்கப்படுகிறது.

மே 14-ம் தேதி மாலை 5மணியளவில், திருக்கோயிலின் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர், இரவு 10 அளவில் ஹரிவாராசனம் இசைக்கப்பட்டு நடை சாத்தப்படும். மீண்டும், மறுநாள் 15-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனமும் அபிஷேகங்களும் நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியில் சந்நிதான தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தலைமை தாங்கி நெய் அபிஷேகத்தைத் தொடங்கிவைப்பார். சிறப்பு ஆராதனைகளோடு வைகாசி பூஜைகள் நடைபெறும். மே 19-ம் தேதி வரை வழக்கமான எல்லா பூஜைகளோடு நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உதயாஸ்மன பூஜைகளும் நடைபெறும். 19-ம் தேதி இரவு 7 மணியளவில் திருக்கோயில் படிகளுக்கு பூஜை நடைபெறும். பின்னர், 10 மணியளவில் திருக்கோயில் நடை சாத்தப்படும்.

ஐந்து நாள் நடை திறப்பில், 17-ம் தேதி திருக்கோயிலில் ஸ்ரீஐயப்பன் கோயில் பற்றி தேவப்பிரசன்னம் பார்க்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்ற பங்குனி உத்திர ஆராட்டு விழாவின்போது, ஸ்வாமி சிலையைத் தாங்கி பம்பைக்குச் சென்ற கோயில் யானை மிரண்டு ஓடியது. யானையின் மீதிருந்த ஸ்வாமி சிலையும், அர்ச்சகரும் கீழே விழுந்தனர்.

இந்தச் செயல், தீய சகுனமாகக் கருதப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிவதற்காகத் திருக்கோயில் சார்பாக 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை தேவப்பிரசன்னம் பார்க்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பிறகு, பரிகார பூஜைகள் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏகாந்தமாக ஸ்ரீஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், வரும் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சபரிமலைக்குச் சென்று தரிசிக்கலாம்.



Leave a Comment