சடாரி வைத்து கொள்வதின் மகிமைகள்


திருமால் ஆலயங்களுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் எல்லா சந்நதிகளிலும் தீர்த்தம், திருத்துழாய் என்கிற துளசி அல்லது மஞ்சள் காப்பு, குங்குமம் முதலிய பிரசாதங்களைப் பெற்றுக் கொள்வதுடன் ஸ்ரீசடாரியை சிரசில் தரித்துக் கொண்டால்தான் அந்தந்த சந்நதிகளில் வழிபாடு பூர்த்தியானதாகக் கருதுவார்கள்.

சடாரி எனப்படுவது என்ன?

திருவடி அடியார்களைக் காப்பது திருவடி நிலை

திருவடி நிலையே பாதுகை

பாதுகையே சடாரி

சடாரியே நம்மாழ்வார்

பாதுகை, சடாரி, ஆழ்வார் எல்லாம் ஒன்றே


வைணவ ஆலயங்களில் எம்பெருமான் திருவடிக்கு முன்பாக இருக்கும் பாதுகைகள் கொண்ட திருவடி ‘மகுடம்’ சடாரி எனப்படுகிறது. அதற்கு அந்தப் பெயர் எப்படி வந்தது? ஆழ்வாரும் பாதுகையும் ஒன்றேதான் என்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது. பெருமானுடைய பாதுகை ஆழ்வாருடைய திருநாமமான சடாரி எனும் நாமத்தை வகிக்கிறது. பாதுகையை நம் தலையில் கோயில் பட்டர்கள் வைக்கும்போது அதன் மூலமாய் பெருமாள் திருவடி சம்பந்தம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.

இந்த வகையில், நமக்குப் பெருமாள் திருவடியை ஸ்பரிசம் அருளியவர்கள் இருவர். ஒருவர் ஆழ்வார், மற்றது பாதுகை. ஆகவே இருவருக்கும் சடாரி என்ற திருநாமம் இருப்பதில் வியப்பில்லை. ஆழ்வாருடைய அமுதத் திருவாய் ஈரத்தமிழைப் பயின்று எம்பெருமானை அடிபணிவோர்க்குப் பரமனருள் சித்திக்கும்.

அதற்குப் பாக்கியமில்லாதவர்களுக்கு, பாதுகை அப்பேற்றை அளிக்கிறது. சுவாமி தேசிகனின் பெருமைக்கு உவமை கூறும் திவ்ய ஸுக்தி அவர் வடமொழியில் அருளிச் செய்துள்ள ‘பாதுகா ஸஹஸ்ரம்’ என்னும் ஸ்தோத்திர மாகும். அதை அருளுவதற்கான காரணம் என்ன? பகவானுடைய திருவடி மகிமையை பக்தர்களாகிய நாம் அறிந்து உய்யும்படி தாய் போன்ற கருணையுடன் ஆயிரம் பாடல்கள் பாடினார் சடகோபன்.

அந்த இன்தமிழ் ஆயிரத்துக்கு பிரதி சம்பாவனையாக ஆழ்வாருக்கு வட மொழியில் ஆயிரம் சமர்ப்பித்தார் நம் தேசிகன். எவ்வாறு பகவானுடைய திருவடிகளின் பெருமையை அவனுடைய பாதுகையான சடகோபனால் மட்டுமே கூறமுடியுமோ, அங்கனமே அந்த சடகோபனின் பெருமையை அவனுடைய பாதுகைகளான சீடன் மதுரகவியால் தானே கூறமுடியும்? இந்த வகையில் இவர் அருளிச் செய்த ‘கண்ணிநுண் சிறுத்தாம்பின்...’ ஒரு பகுதியைப் பார்க்கலாம். ‘பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’ சடகோபனின் பெருமையை மிக எளிமையாக ஆனால், விளக்கமாக விவரிக்கும் இரு அடிகள் இவை. பகவானுக்கும் சடகோபனுக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் இதுதான். செயல் திருந்தியவரையே பகவான் ஆட்கொள்வான்.

ஆனால், சடகோபனோ திருந்தத்தக்க பாங்கற்றவர்களையும் தாமே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தண்டித்துத் திருத்தி பகவானின் திருவடிகளை அடையச் செய்வான். இந்தப் பெருமைக்கு மதுரகவியாழ்வாரே பிரதான உதாரணம். அதாவது, நம்மாழ்வாரும் இதர ஆழ்வார்களும் ஆயிரக்கணக்கிலே எம்பெருமானின் பெருமையைப் பாடியதாலேயே ஆழ்வார்கள் எனும் பெருமையைப் பெற்றார்கள். ஆனால், மதுரகவியாழ்வாரோ எம்பெருமானைப் பற்றி ஒரு பாசுரம் கூடப் பாடாமல், குருவான நம்மாழ்வார் மீது பத்து பாசுரங்கள் பாடியே ஆழ்வார்கள் வரிசையில் இடம் பெற்றுவிட்டார்.

சடாரி, பகவானுடையது மட்டுமின்றி, பிராட்டியினுடைய பாதுகைகளையும் குறிப்பதாகும். ஆனால், நம்மாழ்வாருக்குப் பின்னால் வந்த ஆழ்வார்
ஆச்சார்யர்களுடைய பாதுகைகளும் சடாரி என்றே குறிப்பிடப்படுகின்றன. ஆனால், இது தவறு. நம்மாழ்வார் மற்றும் பிற ஆழ்வாராச்சார்யார்களுக்கு அபசாரம் தோற்றுவிப்பது என்றும் ஒரு வாதம் உண்டு. அப்படியானால் அவர்களுடைய பாதுகைகளை என்ன சொல்லி அழைப்பது? அந்தந்த ஆச்சார்யார்களுடைய பாதுகைகளை அவர்களின் பிரதான சிஷ்யர்களின் திருநாமத்தைக் கொண்டே அழைக்க வேண்டுமென்று பெரியோர்கள் கூறுவர். இதை அடிப்படையாகக் கொண்டு
ஆழ்வார்கள்-ஆச்சார்யார்கள் பாதுகைகளின் திருநாமங்களுக்குச் சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

கருடபகவான் சடகோபன்
ஆஞ்சநேயர் ராமதாசர் அல்லது
கம்பநாட்டாழ்வான்
சேனை முதலியார் சடகோபன்
ஆண்டாள் சடகோபன்
நம்மாழ்வார் மதுரகவிகள்
மதுரகவிகள்
பொய்கையாழ்வார்
பூதத்தாழ்வார்
பேயாழ்வார்
திருமழிசைப்பிரான்
பெரியாழ்வார்
குலசேகரர்
தொண்டரடிப்பொடிகள் ராமானுஜன்
திருப்பாணாழ்வார்
நாதமுனிகள்
உய்யக்கொண்டார்
மணக்கால் நம்பி
ஆளவந்தார்
பெரியநம்பி
திருக்கோட்டியூர்நம்பி
பெரிய திருமலை நம்பி
திருக்கச்சி நம்பி
திருவரங்க பெருமாள் அரையர்
பாஷ்யகாரர் முதலியாண்டான்
வேதாந்த தேசிகன் நயினாராசார்யார்
எம்பார் பட்டர்
பட்டர் நஞ்ஜீயர்
நம்பிள்ளை வடக்கு திருவீதிப்பிள்ளை
வடக்கு திருவீதிப்பிள்ளை - லோகாச்சாரியார்
லோகாச்சாரியார் - மணவாளமாமுனிகள்
மணவாளமாமுனிகள் - பொன்னடியாம்
செங்கமலம்.

பகவானுடைய திருப்பாதுகைகளுக்கு உரித்தான பெருமைகளெல்லாம் ஆழ்வார் ஆச்சாரியார்களுடைய திருப்பாதுகைகளுக்கும் உண்டு என்பதில் ஐயமேதுமில்லை. எனவே, கோயில்களுக்குச் செல்லும்போது அனைத்துச் சந்நதிகளிலும் சடாரி பெற்றுக்கொண்டு நம்மை புனிதப்படுத்திக் கொள்வது நமக்கு நல்ல கதியை அளிக்கும்.



Leave a Comment