சங்கு பூஜை செய்ய விரும்புகிறவர்களுக்கு...
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் கிடைப்பதற்காக பாற்கடலைக் கடைந்தபோது சில அரிய பொருட்கள் தோன்றின.
அவற்றில் வலம்புரி சங்கும் ஒன்று. இதனை லட்சுமியின் அம்சம் என்பார்கள்; பூஜைக்குரியதாகும். லட்சம் சங்குகளில் ஒன்றுதான் வலம்புரிச் சங்காக அமையும். இடம்புரிச் சங்கைவிட ஆயிரம் மடங்கு உயர்ந்தது வலம்புரிச் சங்கு. வலம்புரிச் சங்கு சுபகாரியங்களுக்கு மட்டும் பயன்படும்.
ஆனால் இடம்புரிச் சங்கு அனைத்துக் காரியங்களுக்கும் பயன்படுகிறது. அதனால் தான், ஆலயங்களில் வலம்புரிச்சங்கைப் பயன்படுத்துகிறார்கள். சில ஆலயங்களில் பூஜை முடிந்ததும் வலம்புரிச் சங்கினை ஏலம் விடுவார்கள். அதை வாங்கி இல்லத்தில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் சுபிட்சம் ஏற்படும்.
சங்கு பூஜை செய்ய விரும்புகிறவர்கள், வலம்புரிச் சங்கில் நீர் நிரப்பி வைத்து, மலர்களால் அர்ச்சித்து, காயத்ரி மந்திரம் ஜபித்து, காயத்ரி தேவியின் படம் அல்லது சிற்பத்துக்கு அருகே வைத்து விடவேண்டும். பிறகு காலையில் எழுந்தவுடன், காலைக்கடன்களை முடித்துவிட்டு, நீராடியபின், பூஜை அறையில் சங்கில் உள்ள நீரினை முதலில் வீட்டின் வாசற்படி மேல் தெளிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் லட்சுமியானவள் நிரந்தரமாக இல்லத்தில் தங்கியிருப்பாள். மேலும், வெள்ளிக்கிழமைகளில் பசும்பால், துளசி இலைகளைப் போட்டு வைத்து பூஜை செய்ய வேண்டும். இதனை அடுத்தநாள், காலையில் எழுந்ததும் நீராடிவிட்டு, பூஜை முறைகளைச் செய்துவிட்டு, சங்கில் உள்ள பசும்பால், துளசி இலைகளை பிரசாதமாகச் சாப்பிட, நாள்பட்ட நோய்கள் குணமாகும்.
Leave a Comment