தீபம் ஏற்றும் முறையும் பலனும்


ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர்.

எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு. வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தீபம் ஏற்றும் நேரம் தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்). காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும்.

முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.



Leave a Comment