வரதராஜ பெருமாள் கோயிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தீர்த்தவாரி


நெல்லையில் இருக்கும் வரதராஜ பெருமாள் கோவிலில் 70 ஆண்டுகளுக்கு பிறகு தாமிரபரணி ஆற்றில் நேற்று தீர்த்தவாரி நடந்தது.
மிகவும் பழமைவாய்ந்த வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாலையில் பெருமாள், தாயார் வீதி உலா நடந்து வந்தது.
10-ம் நாள் நிகழ்ச்சியாக தீர்த்தவாரி நேற்று நடந்தது. இதையொட்டி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. பகல் 12.30 மணி அளவில் தீர்த்தவாரி கட்டிடத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது.
வரதராஜ பெருமாள் கோவிலின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி மண்டபத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த மண்டபம் சரியாக பராமரிக்கப்படாததால் நீண்ட காலமாக தீர்த்தவாரி நடைபெறாமல் இருந்தது.
70 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நேற்று தீர்த்தவாரி நடந்தது. இரவு வெள்ளி பல்லக்கில் பெருமாள் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Leave a Comment