ஸ்ரீரங்கம் சித்திரைத் தேரோட்ட விழா கொடியேற்றம்
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் மே 13-ல் நடைபெறவுள்ள சித்திரைத் தேரோட்ட விழா கொடியேற்ற நிகழ்ச்சி சனிக்கிழமை காலை நடைபெற்றது.
விழாவையொட்டி சனிக்கிழமை அதிகாலை மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு துவஜாரோஹண மண்டபத்தை 3.45-க்கு வந்து சேர்ந்தார்.
தொடர்ந்து 5.30-க்குள் வேதமந்திரங்கள் முழங்க தங்கக் கொடிமரத்தில் கொடியேறப்பட்டது. அப்போது நம்பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். பின்னர் 6.15-க்கு புறப்பட்டு கண்ணாடி அறை சென்று சேர்ந்தார் நம்பெருமாள்.
பின்னர் மாலை 6.30-க்கு உபநாச்சியார்களுடன் அவர் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்து, சந்தனு மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கிருந்து இரவு 8.30-க்கு புறப்பட்டு யாகசாலை மண்டபத்தை அடைந்து, திருமஞ்சனம் கண்டருளி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறை சென்று சேருகிறார்.
இதைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறார்.
முக்கியமாக வரும் 8-ஆம் தேதி தங்கக் கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளுகிறார்.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன். ஜெயராமன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்கின்றனர்.
Leave a Comment