மாங்கல்ய பலம் தரும் பெரியபாளைம் பவானி அம்மன்


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.


தல வரலாறு :
கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘கம்சா! உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்’ என்றது அந்தக் குரல். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார்.

கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது.

‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

வளையல் வியாபாரி :

முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்குவந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமமும் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில்பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா’ என்று கூறி மறைந்தார்.

மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

ஆலய அமைப்பு :

பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆலயத்திற்குள் நுழையும் போது விநாயகர் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் மாதங்கி அம்மன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெறும். ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் உற்சவமும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை பக்தர் களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமையில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத்திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.



Leave a Comment