அவிநாசிலிங்கேசுவரர் கோயிலில் சித்திரை தேரோட்டம்


அவிநாசிலிங்கேசுவரர் கோயில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 27ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. அவிநாசிலிங்கேசுவரர் கோயில் சித்திரை திருவிழா நேற்று காலை வேத பாராயணம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
முன்னதாக கோயிலில் யாகசாலை முன்மண்டபத்திலும், கொடிமரத்தின் முன்புறமும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று, கொடி மரத்துக்கும், பலிபீடத்துக்கும் புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கொடித்துணியில் அதிகாரநந்தி, சூரிய சந்திரன், சிவலிங்கம், ஆகியன வரையப்பட்டு பூ மாலை அணிவிக்கப்பட்டு, கொடி பூஜைகள் நடந்தது. சண்டிகேசுவரர், விநாயகர், சுப்ரமணியர், அவிநாசியப்பர், கருணாம்பிகையம்மன் ஆகிய உற்சவர்களுக்கு அபிஷேக, அலங்கார, மகா தீபாராதனைகள் நடைபெற்றன.
பெங்களூரு வேத விக்யான் மகா வித்யாபீட முதல்வர் சுந்தரமூர்த்திசிவம் தலைமையில் வேத பாடசாலை மாணவர்கள் குழுவினர் வேத பாராயணம் நிகழ்த்தினர். வேத பாராயணம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் கோலாகலமாக தேர்த்திருவிழா துவங்கியது.
இதையடுத்து, நேற்றிரவு திருமுருகன்பூண்டியில் இருந்து திருமுருகநாதர் வருகையும் நடந்தது. 24ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நடக்கிறது.
25ம் தேதி இரவு கற்பகவிருட்சம் யானை வாகனம், சுவாமிதிருக்கல்யாணம், யானைவாகனக்காட்சிகள், திருவீதி உலா ஆகியன நடக்கிறது. 26ம் தேதி காலை சோமஸ்கந்தர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும், திருத்தேருக்கு எழுந்தருளல் நடக்கிறது.
27ம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 28ம் தேதி காலை 10 மணிக்கு கருணாம்பிகையம்மன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், தேர் நிலை சேர்தலும் வண்டித்தாரை, பரிவேட்டை நடக்கிறது.
29ம் தேதி தெப்பத்தேர் உற்சவ நிகழ்ச்சியும், 30ம் தேதி நடராஜபெருமான் மகாதரிசனமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹர்ஷினி, கோயில்செயல் அலுவலர் அழகேசன் ஆகியோர் செய்துள்ளனர்.



Leave a Comment