திக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேச வைக்கும் கோயில்


திக்கிப் பேசுபவர்கள் தெளிவாகப் பேசவும், பேசும் சக்தி இழந்தவர்கள் அந்த சக்தியை புதிதாகப் பெறவும் அருள்கிறது உத்தமராய பெருமாள் கோயில். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் பெரிய அய்யம்பாளையத்தில் அமைந்துள்ளது.


தென்னகத்தில் அந்நிய கலாசார தாக்குதல்கள் மேலும் விரிவடையாமல் விஜயநகர நாயக்க மன்னர்கள் தடுத்ததோடு, அந்தத் தாக்குதல்களால் சிதறடிக்கப்பட்ட கோயில்களை புதுப்பிக்கவும் செய்தார்கள். கூடவே, புதிய கலையம்சம் கொண்ட கோயில்களையும் நிர்மாணித்தார்கள். அந்த வரிசையில் பெரிய அய்யம்பாளையத்தில் மலை மீது உருவான இந்தக் கோயில் ஒரு கற்றளி கோயிலாகும்.


சதுர வடிவான கருவறையில் ஏகாந்தமாக, தேவியர்கள் இன்றி சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற தத்துவத்தை விளக்கும் முகமாக, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் உத்தமராய பெருமாள் நான்கு கரங்களுடன் திகழ்கிறார். மேலிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்க, கீழ் இரு கரங்கள் திருப்பதி-திருமலை பெருமாளைப் போல அபய, கடி ஹஸ்தங்களாகக் கொண்டு அருள்பாலிக்கிறார்.


கருவறையை சுற்றியுள்ள புறச்சுவர்களில் சிற்ப வேலைப்பாடுகள் ஏதுமில்லை. அறைத் தூண்களும், மேல் கோஷ்டங்களும் மகரத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மேல்பகுதியில் விஜயநகர கலைப்பாணியில் புடைப்புச் சிற்பங்களாக வீரன் அஞ்சலி செலுத்தும் நிலையிலும், அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து செல்லும் நிலையிலும் காணப்படுகிறார்கள்.


அதிஷ்டானம், சுவர், பிரஸ்தரம், கிரீவம், சிகரம், ஸ்தூபி என்ற ஆறு பெரும் பகுதிகளாக கோயில் விமானம் அமைந்துள்ளது. சுவரின் மேலுள்ள பிரஸ்தரம் என்று அழைக்கப்படும் கூரைப் பகுதி, கருவறையை மூடும் அமைப்பாக உள்ளது. இவற்றின் நான்கு மூலைகளிலும் கருட பகவான் காட்சியளிக்கிறார். கிரீவப் பகுதியின் முதல் தளத்தின் நான்கு மூலைகளிலும் கர்ண கூடங்கள் அமைந்துள்ளன.


இரண்டாவது தளத்தை தெய்வ, மானிட உருவங்கள் தாங்கி நிற்கின்றன. குழல் ஊதும் அனுமன், நரசிம்மர், மகாவிஷ்ணு, மகாலட்சுமி ஆகிய தெய்வ உருவங்கள் சுதைச் சிற்பங்களாக உள்ளன. இங்குள்ள அர்த்த மண்டபம் சதுர வடிவிலும், தூண்கள் சதுரப் பட்டையாகவும் உள்ளன. தூண்களில் விஜயநகர காலத்திய பெண், திருமால், அனுமன், சங்கு, சக்கரம், அன்னப் பறவை, பெரியாழ்வார், ராமானுஜர் உருவங்கள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன.


கருவறைக்கு எதிரில் கருட பகவான் மூலவரை நோக்கி கூப்பிய கரங்களுடன் காட்சியளிக்கிறார். கருவறை வாயில் காவலர்களாக துவார பாலகர்கள் விஜயநகர கலைப்பாணியில் அமைந்துள்ளனர். கோயில் அமைந்துள்ள குன்றின் ஒரு பக்கத்தில் அமர்ந்து அமைதியாக தியானம் செய்ய குகையும், அனுமன் சந்நதியும் அமைந்துள்ளன. இந்தக் கோயிலில் தின பூஜைகளும், சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகளும் நடக்கின்றன.


புரட்டாசி மாதத்தில் நவராத்திரி, கார்த்திகையில் விஷ்ணு கார்த்திகை, தை மாதத்தில் காணும் பொங்கலுக்கு மறுநாள் மகரத் திருவிழா என்று விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இதுதவிர ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நடைபெறும் விசேஷ பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் தடைகள் நீங்கி திருமணம் நடக்கும் என்பது திடமான நம்பிக்கை.


திக்கிப் பேசும் குழந்தைகள், பேச்சிழந்த குழந்தைகள், ஞாபக சக்தி குறைந்த குழந்தைகளுக்கு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும் தேன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து ஏழு வாரங்கள் அவர்கள் பூஜையில் கலந்து கொண்டு பிரசாத தேனை அருந்தி வந்தால் குறைகள் படிப்படியாக குணமாகிறது என்கிறார்கள். கோயிலைச் சூழ்ந்துள்ள இயற்கை எழில், அதற்குக் கட்டியம் கூறுகிறது.


வேலூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் கண்ணமங்கலத்திலிருந்து 4 கி.மீ. தூரத்தில் அமைந்து இருக்கிறது உத்தமராய பெருமாள் கோயில்.



Leave a Comment