பிறந்தது "விளம்பி' வருடம்...
தமிழ் புத்தாண்டு விளம்பி சனிக்கிழமை பிறப்பதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளன. கிராமப் புறங்களில் ஏர் உழுது சிறப்பு வழிபாடு நடத்தவும் விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
நடப்பு தமிழ் ஆண்டான ஹேவிளம்பி நிறைவடைந்து சனிக்கிழமை விளம்பி புதிய ஆண்டு பிறக்கிறது. இதையடுத்து மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். பின்னர் சிறப்பு புத்தாண்டு பூஜைகளும் நடத்தப்படவுள்ளன. மதுரைகூடலழகர் பெருமாள், இம்மையில் நன்மைதருவார் திருக்கோயில் மற்றும் அழகர்கோவில், திருப்பரங்குன்றம் திருக்கோயில்களிலும் தமிழ் புத்தாண்டுக்கான சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு மதுரை ஊரகப் பகுதிகளில் உள்ள கிராமப்புறங்களில் விவசாயிகள் ஏர் உழுது கொண்டாட உள்ளனர். மேலும், கருவேலங்குச்சியில் தார்க்குச்சி அமைத்து அதை வீட்டின் முன் வைத்து ஏர் கலப்பையுடன் பூஜை செய்வதையும் விவசாயிகள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வறட்சியான நிலத்திலும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஏர் உழுதால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும்.
அறுசுவை உணவு வகைகளை புத்தாண்டு பிறக்கும் நாளில் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்பதை ஒரு வழக்கமாக நாம் பின் பற்றுகிறோம். இனிப்பு, காரம்,புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு என்பவையே அறுசுவையாகும். தேன்குழல், அதிரசம், காரமான உணவுவகைகள், மாங்காய் பச்சடி, புளிக்கூட்டு, உப்புவற்றல், வாழைப்பூ வடை,வேப்பம்பூ பச்சடி என்று எல்லா வகை உணவுகளும் இடம்பெற்றிருக்கும். வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறி மாறித் தான் உண்டாகும். துன்பக் கலப்பில்லாத இன்பத்தை நாம் பெறவே முடியாது என்பதை நமக்கு உணர்த்துவதற்காகத் தான் சாப்பிடும் உணவிலேயே அறுசுவைகளையும் சேர்த்துக் கொள்கிறோம். வாழ்க்கை இன்பமும் துன்பமும் கலந்தது என்பதை அறுசுவை உணவு உணர்த்துகிறது.
Leave a Comment